Monday Motivation: தாலாட்டும் சில ஞாபகங்கள்

Su.tha Arivalagan
Sep 21, 2026,03:10 PM IST

முனைவர் தி. தங்கலட்சுமி


அண்ணாமலையாரின் அடி நிழலில் வதிந்து வாழ்ந்து வந்த ஜீவனை  "நல்லவண்ணம் உன் ஊர் போய்ச்சேர்!" என்று  சுவாமியே வழியனுப்பி வைத்துவிட்டார். இனி இச்சீவன் கல்விக் கண் திறந்த கற்பகத்தரு வாழ்ந்த விருதை மண்ணில் இருந்து தனது தமிழ்ச் சேவையைத் தொடரும்...! 


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதெல்லாம் கணியன் பூங்குன்றனார் காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாகி இருக்கலாம். புதிய ஊரில் புதிதாகக் குடியேறிய போது, அக்கம்பக்கம் இருப்போரால், அந்நிய தேசத்தார் போல் நேசம் அற்றே நோக்கப்பட்டோம். அகஸ்மாத்தாய்ப் புன்னகைத்தால்கூட மறுமுறுவல் கிடைக்கப் பெறாது, ஏமாற்றமே மிஞ்சி நின்றது. காரணம் போகப்போகப்  புரிந்தது... சொந்த வீட்டுக்காரர்களுக்கு மத்தியில் வாடகைக் குடித்தனக்காரர்களாய் இருந்ததும், வேற்று ஆளாய் இருந்ததும் (வேற்று இனம்) - (இனம் இனத்தோடு சேரும் என்பது சரிதான் போல...) இனமென நோக்கினால்... குணமெல்லாம் பின்தங்கிவிடுகிறதே! அந்தோ பரிதாபம்! 


வீட்டுப் பொருளை எல்லாம் மூட்டைகட்டி ஒன்றுகூட்டி... பத்திரமாகக் கொண்டு வந்து பிரித்து அடுக்கும் வைபவம்...  பெருந்திருவிழா போன்றது. இத்திருவிழாவை ஒற்றை மனுஷியாக இழுத்துப் போட்டு வெகு நேர்த்தியாக செய்து சாதித்த பெருமை எல்லாம் அன்பு அன்னையையே சாரும். 


மூட்டை முடிச்சுகளில் இருந்து ஒவ்வோர் பொருளாய் வெளிவரும்போது சில அரிதான பொக்கிஷங்கள் எல்லாம் கண்ணில்பட்டு ஆச்சர்யம் கூட்டின. "அடடே! இந்தப் பொருள் இன்னும் நம்மிடம்தான் உள்ளதா?" என்று அதிசயத்தைக் கண்டது போன்ற வியப்புகள் விழிகளை விரியச் செய்தன.




பழைய காலத்து நிறம் மங்கிய வெண்கல அண்டா, பித்தளைப் பானை... என்று புழங்காத ஆனாலும் வேண்டாம் என்று விட்டொழிக்க மனமில்லாத பழம்பொருட்களின் கண்காட்சி காணக் கிடைத்தன. அது ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் ஒரு வரலாறு வேறு ஒட்டிக்கொண்டு இருக்கும். 'இது எங்கள் கல்யாணத்தோடு அப்பாவின் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து வாங்கித் தந்தது. இது என் பாட்டி தந்த சீர்வரிசை' என்று பழம்பொருளுக்கு ஒரு பழங்கதை வரலாறாக ஒட்டிக்கொண்டு நிற்கும். 


எல்லாப்பொருளும் அதனதன் இடம் சென்று அமர்ந்த பிறகு, வீட்டின் பரணே கண்ணில்படாத அருங்காட்சியகமாக மாறி அமைதி பூண்டிருந்தது. இன்னும் சில பொக்கிஷங்களாக இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நிழற்படங்கள்... மனக்கண்ணில் இப்போதுதான் என்பது போல நிஜமாக விரிந்து நின்றன. அந்தந்த படங்கள் எடுக்கப்பட்ட சூழலும், காலமும் விரைந்து மனதில் வந்து சென்று சில ஞாபகங்களைத் தாலாட்டின. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்று சொல்லித் தேடும்படியாக சில படங்களைக் காணும்போது, காலத்தின் கால்தடத்தை நன்கு உணர முடிந்தது.


எல்லா சந்தோஷத்தையும் அரிக்கும் கறையானாக மழை பெய்த இரவில் புதுமனையில் கரு நிற சிறுசிறு பூச்சிகள் கொய்யென வந்து சன்னல் திரையில் படையெடுத்து பயமுறுத்தின. ஒன்றிரண்டு கை கால்களில் ஓடிட, விரட்டிவிட்ட பின்பும் ஆங்காங்கே உடலில் ஊர்வது போன்ற மனபிரமையில் இருந்து விடுபட இரு நாட்கள் ஆயின.


'வந்ததும் தெரியவில்லை... சென்றதும் தெரியவில்லை...' எனும்படியாக ஒரு வார காலம் வெகு விரைவாக ஓடியே விட்டது. புதுமனை இப்போது பழகிய மனையாக மாறிவிட்டது.