எளிமையெனும் பண்பால் ஏற்றங்கண்டவர்!
Oct 02, 2026,05:47 PM IST
- முனைவர் தி.தங்கலட்சுமி
வாய்மை எனும் வாழ்வறத்தை
வாழ்ந்து காட்டிய வள்ளல்!
நேர்மை எனும் நெஞ்சுரத்தை
நெஞ்சில் தாங்கிய நேசர்!
அகிம்சை எனும் அறவழிப்போரை
அகிலத்திற்கு அறிமுகப்படுத்திய அண்ணல்!
உண்ணாவிரதமெனும் உணவுக்கட்டுப்பாட்டால்
உணர்வுக்கட்டுப்பாட்டை
உலகிற்கு உணர்த்திய உத்தமர்!
பொதுநல சேவைக்கு இலக்கணம்
வகுத்த புண்ணியர்!
பெற்ற கொடையால் கோடீஸ்வரர்
ஆவோர் பலருண்டு - இன்று...!
ஆனால்...!
பொதுநிதியைப் புதையலென காத்து...
ஆடம்பரம் தவிர்த்து...
அத்தியாவசியம் அறிந்து...
நேர்மை நெறிநின்று...
துல்லிய வரவுசெலவுக் கணக்கெழுதி...
தூய்மையின் தூதராய்...
நேர்மையின் அசலாய்...
கடமையாற்றிய கண்ணியர்!
சமாதானம் நல்கிய சன்மானமாய்..
கோட்சேயின் குண்டுக்குத் தன்னையே ஈந்தவர்!
அறத்தை மறந்த
அறிவுஜீவிக் கூட்டம் ஒருபுறம்!
அறம் எதுவென அறியா
அடுத்த தலைமுறை மறுபுறம்!
இந்நிலை மாறிட
அறநெறி தழைத்திட
மகாத்மாவின் ஜெயந்தி நாளில்
உறுதி ஏற்போம்!
உத்தமர் காட்டிய நல்வழியில்
உன்னத நடை பயில்வோம்!
(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)