Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
- முனைவர் தி. தங்கலட்சுமி
உழைப்பின் உன்னதம் உணர்த்தும்
இயற்கையை உற்று நோக்கியே
வாழ்வில் சிறப்புகள் பல பெற்றிட வாரீர்!
வாழும் காலம் முழுமையும்
ஓய்வென்பதறியா........
உழைப்பின் உதாரணர்களாம்
சிற்றுயிர் பெரும்படை வீரர்கள்!
அணிவகுப்பு நடத்தியே
ஆகார சேகரம் செய்யும்
அதிசய ஒழுங்கு நிறை
குழு ஒற்றுமை காக்கும்
எறும்பையே கண்டிடுவீர்!
இயற்கையின் இன்சுவைப் பொக்கிஷத்தை
புதையல் வேட்டையாளர் போல
பூக்கள்தோறும் தேடித் தேடியே
சேகரம் செய்திடும்
சுறுசுறுப்பாளரைக் காணீர்!
மதுரம் கூட்டி
பிரம்மாண்ட மாளிகை நாட்டி
தித்திக்கும் தேனடையென
அலங்கார அரண்மனைதனில்
ஆயிரம் சேவகர் புடைசூழ
ராணித் தேனீயின் சாம்ராஜ்யம் பாரீர்!
வெறும் வாயாலேயே வடைசுடும்
வம்பர்கள் மத்தியில்,
நிஜமாகவே வெறும் வாயால்
வலை பின்னும் கலையில்
கைதேறிய கலைஞனைக் காணீர்!
வலை விரித்துக் காத்திருந்தே
தன் இரையைச் சிறைப் பிடித்து
ஜீவிக்கும் வேட்டுவ ஜீவன்!
எத்தனை முறை வலைப்பின்னலை
அறுத்தெறிந்தாலும்
அலுக்காது சலிக்காது மீண்டும் மீண்டும்
வலை பின்னும் வலைஞன்!
விந்தையான வடிவுடை
கலைவித்தை நிறை
மனவுறுதிக்குச் சான்றாய்த் திகழ்
சிலந்தியை உற்று நோக்கிடுவீர்!
இயற்கை போதிக்கும் பாடம் பயின்றே
மனித வாழ்வில் மேன்மை அடைய
சோம்பலை ஒழித்து
மனிதயின ஒற்றுமை பேணி
சீரான ஒழுக்கம் கடைப்பிடித்தே
உழைப்போடு சேமிப்பையும் மேற்கொண்டே
வாழ்வாங்கு வாழ்வீராக என்றே
உழைப்பாளர் தினத்தில் உரக்கச் சொல்லும்
சிற்றுயிரிகளின் சீரிய செய்தி இதுவே!!!
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).