பணம் எனும் மாயவன்!
- முனைவர் தி. தங்கலட்சுமி
ஓரிடம் நில்லா
உருள் பொருள் இது!
உருவில்லா ஒன்றையும்
உருக்கொள்ளச் செய்திட்டு
உறவுக்குள் விரிசல்
உண்டாக்கும் விசித்திரன்!
மதிப்பென்றும் கௌரவமென்றும்
மாயையான மதிமயக்கத்தைத் தோற்றுவிக்கும்
மாயையின் மைந்தன் இவன்!
பண்டமாற்றுக் காலத்தில்
பாங்காய் வாழ்ந்த மனிதனை
பணமென உருப்பெற்ற பின்
பகட்டாய் வாழப் பழக்கிய
பாதகன் இவனே!
இவனொரு பொல்லா சூழ்ச்சிக்காரன்!
தேவை எனத் தோன்றச் செய்து
தேவையில்லா தலைவலியைத்
தோன்றிடச் செய்பவனும் இவனே!
தேவைகள் ஒன்று நிறைந்தால்
தேவையின் தேவையை நீட்சி செய்து
தேவைகளாலேயே ஆட்சி செய்பவன்!
தேவையோ... தேவையில்லையோ...
தேடிச்சேர்க்க திரைகடலையும்
தாண்டச் செய்வான்!
தாண்டிச் சென்றவரைத்
திரும்பி வாராத் தொலைவு
துரத்திச்செல்லும் வேங்கையாக்கி
துள்ளியோடும் மாயமான் ஆவாய் நீ!
ஆசை எனும் வித்தினை
மனத்தோட்டத்தில் விதைத்து
பகலில் ஓடியுழைத்தது போதாமல்
பகலெது இரவெது என அறியாது
ஓயாது ஓடச் செய்தே துரத்திப்பிடித்தும்
தீராத ஆசைக் கனவுகளால்
பேராசை எனும் பெருவிளைச்சலை
உண்டுபண்ணும் தீயவன்!
கைப்பொருளென வந்ததுபோல் வந்து
கரைந்தே தீர்வான் நொடியில்...
கைப்பொருளாய் வந்துசேர்ந்து
மெய்ப்பொருளாய் நின்றுநிலைப்பது
வெகுசிலரிடம் மாத்திரமே!
அச்சிலரினும் சிலரை
கஞ்சனெவும் மகாகஞ்சனெவும்
வசைமொழி பெறவும் செய்திடுவாய் நீ!
அள்ளி அள்ளி வழங்கினால்
கர்ணனெவும் அவன் அண்ணனெவும்
வள்ளலாகவும் வணக்கத்திற்குரியராகவும்
அடைமொழி பெறவும் செய்திடுவாய் நீ!
அற்பனென்றும் ஆக்குவாய்
அற்பனுக்கு வந்த வாழ்வு என்று
வஞ்சப்புகழ்ச்சியாய் ஏசவும்
வாகாய்வழி செய்திடுவாய் நீ!
பொறாமையெனும் தீக்குணத்தை
பலரது நெஞ்சில் மூட்டி
பதமாய் குளிர்காய்வாய் நீ!
பங்குச்சந்தையில்
ஏற்ற இறக்கம் கொண்டு
நாட்டின் பொருளாதாரத் தராசை
ஆட்டங்காணச் செய்வாய் நீ!
உலகச் சந்தையில்
உன் மதிப்பு நிலையில்லாதது!
உழவர் சந்தையிலும்
உள்ளூர் சந்தையிலும்
விலைவாசி ஏற்றத்தாழ்வால்
சாமானியனின் வீட்டையும்
சாம்ராஜ்யக் கோட்டையையும்
கொஞ்சம் அசைத்தே
பார்ப்பாய் சமயாசமயத்தில்!
பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும்
இல்லை... இல்லை...
சிசுவாய் வளர கருக்கொள்வது தொடங்கி
இறுதிச்சடங்கு கடந்து
இறப்புச் சான்றிதழ் பெறுவது வரையிலும்
நீயே நித்யம்...
நீயின்றி இவ்வுலகில் எது சாத்தியம்!
சத்தியம் கூட
உரத்துப் பேச யோசிக்கும்
உன்முன்னால்...!
பத்தியம் சொல்லும் வைத்தியத்திற்கும்
பந்தயம் கட்டும் சூதாட்டத்திற்கும்
பட்டம் பெறும் படிப்பிற்கும்
பதவி பெறும் நடிப்பிற்கும்
பலருக்கும் பலம் சேர்க்கும்
பிரதானன் நீ!
அன்றாடங்காய்ச்சிக்கும்
அல்லல் தீர்க்க வந்த தீர்க்கதரிசிக்கும்
அலுப்பு சலிப்பே இல்லாமல்
அலைச்சலும் குடைச்சலும் தந்து
ஆனந்தமாய் ஆட்டிப் படைப்பவன் நீ!
உண்மையாய் உழைப்பவருக்கு
உயர்வுதரும் உத்தமனும் நீ!
சொல்வாக்கு பெற்றவருக்கும்
செல்வாக்குப் பெற்றுத் தருவது நீ!
எதிரும் புதிருமான
எண்ணிலடங்கா முரண்களோடு
எங்கும் நிலைத்திட்ட எஜமானன் நீ!
இல்லாதோர் இயலாதோருக்கு
இரக்கத்தோடே ஈயும் வேளையில்
தகுந்தவர் கைசென்று சேரும்வேளையில்
உனைப்போலொரு நல்லவன் யாருமில்லை;
மனநிறைவெனும் ஆத்ம திருப்தியெனும்
சுகத்தை நல்கும் சுகந்தன் நீயே!
(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)