அன்பு அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துப் பாமாலை!
- முனைவர் தி. தங்கலெட்சுமி
எனதன்பெனும் அமுத ஊற்றின்
முதற்றுளி நீ நல்கியதே!
அதுவே பின்
பல்கிப் பெருகியதே!
பிரபஞ்சமனைத்தும்
அன்பால் நிறைக்க
விழைகிறதே!
கவிதைச் செந்தேனை
உற்பவித்த
உன்னத மலரம்மா!
வாழ்வின் கடினப்பாதைகள்
பல கடக்க...
உடனிருக்கும் உத்வேகம்
நீயம்மா!
உந்தன் அறிவிப்பாலே
உலகை அறிந்தேன்...
நீயே
எந்தன் அற்புத உலகமாவாய்!
பச்சை மண்ணாய்
மடிதவழ்ந்த என்னை
பாலூட்டிச் சீராட்டி
பண்பட்ட பாவையாய்
பார்போற்றும் பாங்காளராய்
பரிமளிக்கச் செய்திட்ட
பரிசுத்தம் நீயம்மா!
அனுபவக் களஞ்சிய அன்னையே...!
உந்தன் அடிபணிந்தே
இனிய அன்னையர் தின
வாழ்த்துப் பகர்ந்தே
மனம் நிறைகிறேன்!!!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).