Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

Su.tha Arivalagan
Sep 07, 2026,10:47 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


அந்த வீட்டுப் பெரியவர் வீட்டின் வெளிமுற்றத்தில் அமர்ந்து பழைய நினைவுகளைத் தனக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்  இளைஞன் ஒருவன்வந்து நின்று வணங்கி, "அங்கிள்! என்னை உங்களுக்கு நினைவிருக்கா?" என்றான்.


அவர் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தார். நெற்றியின் சுருக்கங்களே அவருக்கு வந்தவனை அடையாளம் காண முடியவில்லை என்பதை உணர்த்தியது.


வந்தவன், தன் கைகளில் விதவிதமான பேனாக்களை அள்ளி அவர்முன் நீட்டினான்.


அதில் ஒரு பேனாவைப் பார்த்ததும்... அவரின் முகத்தில் பிரகாசமான ஒளி பரவியது. புன்னகைத்துக் கொண்டே, 


"அடடே! இந்தப் பேனா..."  


என்று அவன் கைகளில் இருந்ததில் ஒரு பேனாவை மட்டும் தன் நடுங்கும் கைகளால் எடுத்தார்.




அந்தப் பேனாவையும் வந்தவன் முகத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, "தம்பி, நீ... அந்த வீட்டில் குடியிருந்த பையன்தானே?" என்றார்.


வந்தவன், "ஆமாம் அங்கிள். உங்களிடம் இந்தப் பேனாவை இரவலாக  வாங்கீட்டுத் திருப்பிக் கொடுக்காத அதே பக்கத்துவீட்டுப் பையன்தான்!" என்று சொல்லி சற்றே வெட்கினான். மேலும் தன் கைகளில் இருந்த எல்லாப் பேனாக்களையும் அவரிடம் நீட்டி, "ரொம்ப வருஷம் கழிச்சு...  வாங்குன இரவல் பேனாவத் திருப்பித் தரேன்ல..! 

அதுனால இத்தன வருஷ லேட்டுக்கும் நஷ்ட ஈடா இதையும் சேர்த்து வாங்கிக் கோங்க" என்றான். 


அதற்கு அவர், "எனக்குக்  கண்ணு சரியாத் தெரியுறது இல்ல. கைநடுக்கமும் அதிகமாயிடுச்சு. பேனா பிடிச்சு எழுதெல்லாம் முடியாது. இத்தன பேனாவ வைச்சு நா என்ன செய்யப்போறேன்" என்றார் விரக்தியாக.


வெளியில் இவர்களின் பேச்சரவம் கேட்டு அப்பெரியவரின் பதின்ம வயதுப் பேரன் எட்டிப் பார்த்தான். வந்தவன் வந்த வேகத்தில் உள்ளோடினான். மீண்டும் வந்தபோது கையில் ஒரு நோட்புக்கை  எடுத்துவந்து புதியவனிடம் நீட்டி,

 "ஆட்டோகிராப் ப்ளீஸ்" என்றான். 


பெரியவருக்கோ ஒன்றும்  புரியவில்லை. சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டே தன்னைப் பற்றி இப்படி அறிமுகப்படுத்திக் கொண்டான் வந்தவன். 


தான் இப்போ ஒரு பிரபலமான எழுத்தாளர் என்றும் இந்த நிலைக்கு உயர நீங்களும் ஒரு காரணம் என்றும் சொல்லி, அப்பெரியவர் பாதம் தொட்டு வணங்கினான். 


இது அந்தச் சிறுவனுக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது. கண்கள் விரிய, "என்ன...? உங்க வளர்ச்சிக்குக் காரணம் எங்க தாத்தாவா?? அது எப்படி??" என்றான்.


"ஆமாப்பா... உங்க தாத்தா கையில இருக்கே அந்தப் பேனாதான் நான் முதன்முதல்ல மாநில அளவில் பரிசு பெற காரணமா இருந்துச்சு. அது என்னோட முதல் வெற்றி! அதனால... இந்தப் பேனா பேருல எனக்கொரு சென்டிமெண்ட் விழுந்துடுச்சு!"


"அதனாலயே  இரவலா வாங்கின பேனாவத்  திருப்பிக் குடுக்காமலே இருந்தேன்".


"இப்போ அந்த சென்டிமெண்ட் தீர்ந்துருச்சா... இல்ல பேனால இங்க் தீர்ந்துருடுச்சா??" என்று ஜாலியாகக் கேட்டான் சிறுவன்.


கலகலவென சிரித்த எழுத்தாளன், "மதிப்பும் மதிப்பீடுகளும் மாறுபடக்கூடியதுங்குறத உணர்ந்ததால திருப்பிக் கொடுத்துட்டேன்" என்றான். அர்த்தம் புரியாது விழித்தான். 


"இந்தப்பேனாவ உங்க தாத்தாகிட்ட இருந்து வாங்கின பிறகு, இது ஒரு இரவல் பேனான்னு நான் யார்க்கிட்டயும் சொன்னதே கிடையாது. இது மூலமா எனக்கு பரிசுகளும் பாராட்டும் கிடைச்ச பிறகு, இந்தப் பேனாவ ஒரு பொக்கிஷப் பொருள்போல பாதுகாக்க ஆரம்பிச்சுட்டேன். என் வீட்டில இருக்குற யாருக்குமே தெரியாது. இது என்னோட சீக்ரெட் பென்".


ஆனா நா அதுக்கப்புறம் இந்தப் பேனாவால ஒரு எழுத்துகூட எழுதியது கிடையாது. எழுதுனா இங்க் தீந்துடுமேன்னு ஒரு நெனப்பு. ஆனாலும் அடிக்கடி எடுத்துப் பார்த்து பெருமிதப்பட்டுக் கொள்வேன். 


ஒருநாள் என் மனைவி என்னோட இந்தச் செய்கையப் பார்த்துட்டு, 'அது என்ன ரகசியமா இந்தப் பேனாவ மட்டும் எடுத்து எடுத்துப் பாத்துப் பூரிச்சுப் போறீங்க' அப்படி இதுல என்ன இருக்கு? யார் கொடுத்தது? என்று எக்கச்சக்கமா சந்தேகம் தொனிக்கிற கேள்வியா கேட்டுத் துளைச்சு எடுத்துட்டா...


வேறுவழியே இல்லாம அவகிட்ட இந்தப் பேனா பத்தின ரகசியத்தச் சொல்லும்படி ஆகிடுச்சு! பல வருஷமா நான் கட்டிக்காப்பாத்திட்டு வந்த ரகசியத்தைச் சொல்ல வேண்டிதாப் போச்சு.


பொறுமையா கேட்டுக்கிட்டு இருந்த அவள், "ப்பூ.... இவ்வளவுதானா?!  நான்கூட என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்துட்டேன், என்றாள். பேனாவ என் கையில இருந்து வாங்கி,  கொஞ்ச நேரம் அதத் திருப்பித்திருப்பிப் 

பார்த்துட்டு, "இதுல ஒன்னும் விசேஷமா இருக்குற மாதிரித் தெரியலையே...  ரொம்ப சாதாரணமான பேனாவாத்தான் தெரியுது. மிஞ்சி மிஞ்சிப்போனா  ஒரு ஐம்பது ரூபா இருக்குமா? அதுக்கு மேலத் தேறாது" என்றாள்".


"எனக்குச் சிரிப்பா வந்தது. பிறகு இந்தப் பேனாவால நான் அடைஞ்ச வெற்றியையும் அதுக்குக் காரணமா அமைஞ்ச இந்தப் பேனா மீதான என் சென்டிமெண்ட் பத்தியும் ரொம்ப பெருமையாச் சொன்னே". 


"அதக் கேட்டதும் அவ சொன்னா, 'ஏங்க உங்க மூளையில தோன்றுன கற்பனைத் திறனால அடஞ்ச வெற்றிய, போயும் போயும் ஒரு அற்பப் பொருளான பேனா மேல சென்டிமெண்ட் கிரியேட் பண்ணி வைச்சுருக்கேன்னு 

சொல்றீங்களேன்னு' பொசுக்குன்னு சொல்லிட்டா" 


அவ சொன்னதக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு.


"அது எனக்கு எவ்வளவு ஸ்பெஷலான வெற்றி. என்னையும் என்னோட எழுத்துத்திறமையையும் ஊர் உலகத்துக்கே அறிமுகப்படுத்தி வைச்ச ஸ்பெஷல் மொமெண்ட்..." 


இதை இப்போது சொல்லும்போதுகூட உணர்ச்சிவயப்பட்டவனாகப் பரவசநிலையில் காணப்பட்டான்.


உடனே வீட்டுல இருந்த எல்லார்ட்டயும் சொல்லிட்டா. என்னோட பத்து வயசு பையனும் 'டாடி இது ரொம்ப ஓல்டு மாடல்' என்றான்.


எங்க அம்மாட்ட போய் எல்லாத்தையும் சொல்லி கையோட கூட்டிட்டும் வந்துட்டா. அவங்களும் என் கையில இருந்து பேனாவ வாங்கிப் பாத்துட்டு, "உனக்கு சென்டிமெண்ட்டா இருக்குறமாதிரி அவருக்கும் அது சென்டிமெண்ட்டான பேனாவா இருந்திருக்கலாம்ல...!" 


இப்போ... உங்க முன்னாடி நிற்கிறேன்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).