Monday Special Dish: ஆவலைத் தூண்டும் அவல் உப்புமா!

Su.tha Arivalagan
Oct 12, 2026,12:34 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


இல்லத்தரசிகளின் உற்ற தோழன் உப்புமா. வீட்டிற்கு யாராவது திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டாலோ, அல்லது விருந்தின் நடுவில் உணவெல்லாம் தீர்ந்துவிட்டாலோ உடனடியாக விருந்தினரின் வயிற்றை நிரப்பும் விருந்தோம்பல், கலைக்குக் கைகொடுக்கும் உன்னத நண்பன் உப்புமா என்றே சொல்லலாம்.


உப்புமா என்ற உணவுப் பதார்த்தத்தை தேசிய உணவாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பும் உப்புமா பிரியர்களும் உண்டு. எப்பப் பார்த்தாலும் வீட்டம்மா,  உப்புமா செய்து போட்டு கொடுமை செய்கிறார்கள் என்று புலம்பும் ஆண்களும் உண்டு. 


இந்த இடத்தில் அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீட்டு அம்மாக்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் உப்புமா செய்து தந்துவிட்டு, அவர்கள் எல்லாம் பிரியாணி ஆர்டர் செய்தா சாப்பிடுகிறார்கள்?? அவர்களும் அதே உப்புமாவைத்தானே சாப்பிடுகிறார்கள்...! 




ரமணி Vs ரமணி தொடரில் வரும் மிஸஸ் ரமணி போல, வெரைட்டி தோசைக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு உப்புமாவிலும் சிலபல வெரைட்டிகள் இருக்கிறது, உங்களுக்கெல்லாம் தெரியுமா உறவுகளே!


ரவை உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, இட்லி உப்புமா, ஓட்ஸ் உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சிறுதானிய உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, ப்ரெட் உப்புமா, வெஜிடபிள் கிச்சடி, (ஆமாங்க, கிச்சடிங்கறதும் உப்புமாவின் ஒன்னு விட்ட சகோதரிதான்) ரவாபாத், சேமியாபாத் (பாத் என்றதும் பயந்துறாதீங்க... காய்கறிகள்  போட்டுக் கிளறும் உப்புமாவின் புனைப்பெயர்தான் அது!)  இந்த வரிசையில் இன்று நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கும் புதுவகை உப்புமா - அவல் உப்புமா!


அவலிலும் சில வகைகள் உண்டு. தாள் அவல் (லேஸ் அவல்), கெட்டி அவல், சிவப்பு அவல் என்று. இதில் நாம் கெட்டி அவல் எடுத்துக் கொள்வோம். 


ஒரு கப் அவலை நன்றாக அரிசி களைவது போல் இருமுறை தண்ணீரில் களைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உப்புத்தூள் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 




வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பதற்கு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், (வெங்காயம் கொஞ்சம் அதிகம் போட்டுக் கொண்டால், சுவை நன்றாக இருக்கும்). பெரிய அளவுள்ள தக்காளி 2 நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 


பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிமசால் பொடி, அவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், அவல் உப்புமா ரெடி!


"அடிக்கடி உப்புமா செய்வது தப்புமா...!" என்று சொல்பவர்கள்கூட ஆசையாக வேண்டி விரும்பி, இந்த அவல் உப்புமாவைச் செய்து தரச் சொல்லி ஆவலாகக் கேட்டு வாங்கி உண்பார்கள்.


நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க பாஸ்.. உப்புமா உணவு மட்டுமல்ல.. அது உணர்வுங்க.. உணர்ந்து சாப்பிட்டா.. சாப்பிட்ட வயிறு உங்களை சந்தோஷமாக வாழ்த்தும்!


ஜெய் உப்புமா!


(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி!  அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும்  தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)