Monday Motivation: நிதானம்.. பிரதானம்!

Su.tha Arivalagan
Oct 05, 2026,04:52 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


இளையர் மூத்தோர் என்ற பேதமேயில்லாது

எப்பருவத்தினரும் எந்நேரத்திலும் 

கைக்கொண்டிட வேண்டிய பண்பு

நிதானம்...!


வாழ்வின் நொடிகள்தோறும் 

நிம்மதி நிலைத்து நின்றிட வேண்டின் 

கையிருப்பாய்க் கொண்டிடுக

நிதானமெனும் அருமருந்தை!


எச்செயல் செய்திடினும் 

முன்திட்டமிடலோடு 

பொறுமையெனும் பண்பும் 

கூட்டணி சேர்ந்திட்டால் 

கைவசமாகும் நிதானம்!




அன்புகாட்டுவதிலும் பண்புபாராட்டுவதிலும் 

கடமையாற்றுவதிலும் கடன்வாங்குவதிலும்

உழைப்பிலும் பிழைப்பிலும் 

உள்ளும் புறமும் 

எங்கும் எதிலும் 

நிரந்தர நித்ய தேவை

நிதானம் ... பிரதானம்!


பருவத்தில் தோன்றிடும் ஈர்ப்பும் 

விதிகளை மதியாத வேகமும்

பின்விளைவை எண்ணாத செயலும்

நித்தமும் எண்ணி எண்ணி 

வருத்தி விடாதிருக்க வேண்டின் 

பிரதான தேவை நிதானம்!


உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணத்திலும் 

சொல்லில் செயலில் நிதானம் காட்டிட்டால்

நிச்சயம் உனக்கே வெகுமானம்! 


ஒற்றைச் சொல்தானே என அலட்சியமாய்

தவறவிட்டிட்டால் நொடியில் வருமே அவமானம்!


பழியும் பகையும் வெறுப்பெனும் நெருப்பும் 

பற்றிக் கொள்ளும் ஏதுவான நிமிடம் 

தவறவிடும் நிதானமே... பிரதானம்!


(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி!  அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும்  தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)