போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

Meenakshi
Jun 23, 2025,05:28 PM IST

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 


இந்த விசாரணையின் போது பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக புகார் வந்தது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.




இதனையடுத்து, பிரசாத் மற்றும் பிரதீப் குமார் ஆகியோருக்கு நடிகர் ஸ்ரீகாந்த் போதைபொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.


இவரிடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினா். மேலும் அவருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொக்கைன் என்ற போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.


இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.