முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
கரூர்: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதலின் போது கட்சி நிதி (Party Fund) வசூலித்து ஊழல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று (29/07/2026) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த வீடு உள்ளிட்ட மொத்தம் 41 இடங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கொள்முதல் ஊழல் புகார்
திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, முறைகேடாக 'பார்ட்டி ஃபண்ட்' (Party Fund) வசூலித்து ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு அமைத்து மாநிலம் தழுவிய அளவில் இந்த விரிவான சோதனையைத் தொடங்கியுள்ளனர். மதுரை, புதுக்கோட்டை, கரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் 6 இடங்களில் சோதனை :
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் மட்டும் 6 வெவ்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கரூர் ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோரிடம் தீவிர விசாரணை :
செந்தில்பாலாஜியின் கரூரில் உள்ள இல்லத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அங்கிருக்கும் அவரது பெற்றோரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறஐ.
நிலவும் பரபரப்பான அரசியல் சூழல்
ஒரே நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சோதனையின் முடிவில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.