திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

Su.tha Arivalagan
Sep 05, 2026,10:44 AM IST

சென்னை : திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மற்றும் திருச்சியில் 10 இடங்களில் சோதனை : 


வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு, திருவான்மியூர் மற்றும் அவர்களின் சொந்த ஊரான திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை அடையாறில் உள்ள தொலைக்காட்சி அலுவலகங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் (TVH உள்ளிட்ட அலுவலக வளாகங்கள்) மற்றும் திருவான்மியூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை முதலே அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


முக்கிய ஆவணங்கள் சிக்கின :




இந்த சோதனையின் போது, சொத்து ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள், நிதி நிறுவன முதலீடுகள் மற்றும் முக்கிய வணிகப் பத்திரங்கள் ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பல மணி நேரமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


முன்னாள் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான தொழில்கள் மற்றும் வணிகப் பங்களிப்புகள் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் திடீர் வருகையால், சோதனை நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு : 


திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை, அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம், நகைகள் அல்லது ஆவணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.