விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம், வருகிற 25ம் தேதி மாமல்லபுரத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. விஜய் இதில் நேரில் கலந்து கொள்கிறார். விசில் சின்னம் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
தவெக கட்சிக்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சம்பவம் இது. இது இன்று வெளியாகி தவெக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவெக கேட்ட சின்னமே கிடைத்துள்ளதால் கட்சித் தொண்டர்களும் ஹேப்பியாகியுள்ளனர். விசில் கிடைச்சாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் ஒலிக்க ஆரம்பித்து விட்டன.
இந்த நிலையில் நடிகர் விஜய் மீண்டும் வெளியில் வருகிறார். அதாவது வருகிற 25ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் அவர் கட்சியின் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். அதில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஜனநாயகன் சிக்கல், சிபிஐ விசாரணை ஆகிய குழப்பங்களுக்குப் பின்னர் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்கவுள்ளார் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவதாகும். இதில் பின்வரும் அம்சங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் கட்சியைப் பலப்படுத்துவது குறித்த ஆலோசனை. தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் அடிப்படைப் பிரிவான 'வாக்குச்சாவடி முகவர்' (Booth Level Agents) குழுக்களை அமைப்பது குறித்த அறிவுறுத்தல்கள். கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்த வழிகாட்டுதல் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படலாம்.
மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகள் மற்றும் அதன் தற்போதைய நிலவரம் குறித்த ஆய்வு.கட்சிப் பணிகளில் சுணக்கமாக இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து சரிசெய்தல். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி போன்ற துணை அமைப்புகளின் செயல்பாடுகளை அதிகரித்தல் ஆகியவை குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.
விஜய் பேசும்போது, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகளுக்குத் தேவையான உற்சாகத்தையும், தேர்தல் களப்பணிக்கான கட்டளைகளையும் பிறப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது எல்லாவற்றையும் விட கூட்டணி உண்டா என்பது குறித்தும் விஜய் நேரடியாகவோ அல்லது சூசமாகவோ குறிப்பிட வாய்ப்புண்டு என்று தெரிகிறது. தற்போதைய சூழலில் தவெகவுக்கு எந்தப் பெரிய கட்சியும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. காங்கிரஸும் கூட வராது என்றே சொல்லப்படுகிறது. எனவே பெரும்பாலும் தவெக தனித்தே போட்டியிடும் சூழல் உருவாகலாம்.