மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
Sep 07, 2026,06:12 PM IST
டெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 7 தொகுதிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதில் முதல்வர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், திருச்சியை ராஜினாமா செய்தார்.
மற்ற தொகுதிகளான பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், தாராபுரம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் அவை காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளைத் தவிர மற்ற 5 தொகுதிகளில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் அந்த தொகுதிகளுக்கு இப்போதைக்கு தேர்தல் கிடையாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது தனித் தொகுதிகளான தாராபுரம் மற்றும் மதுராந்தகத்திற்கு இடைத் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - செப்டம்பர் 9
மனுதாக்கலுக்கு கடைசி நாள் - செப்டம்பர் 16
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - செப்டம்பர் 17
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - செப்டம்பர் 19
வாக்குப் பதிவு - அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 9
புதுச்சேரியிலும் இடைத் தேர்தல்
புதுச்சேரி - தட்டாஞ்சாவாடிக்கும் இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி ராஜினாமா செய்த தொகுதியான தட்டாஞ்சாவடியிலும் அக்டோபர் 6ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.
மதுராந்தகம் - தாராபுரத்தில் வென்றது யார்?
கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். தேர்தலுக்குப் பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி, தவெகவில் சேர்ந்தார். அதேபோல தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் வென்றவர் சத்யபாமா. அவரும் அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
இடைத் தேர்தலில் மீண்டும் இவர்களுக்கு சீட் கொடுக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் திமுக மற்றும் அதிமுக தரப்பு கடும் கோபத்துடன் உள்ளதால் வலுவான வேட்பாளர்களை களம் இறக்கவும் தவெக தலைமை தீர்மானிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.