பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
பாட்னா: வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்களின் வசதிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களின்படி, வேட்பாளர்களின் புகைப்படங்கள் வண்ணத்திலும், பெயர் மற்றும் மற்ற தகவல்கள் தடிமனான பெரிய எழுத்துகளிலும் அச்சிடப்படும்.
வாக்காளர்களுக்கு எளிதாக அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதால், சில வாக்காளர்கள் வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் குழப்பம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. அதைத் தவிர்க்கவே இந்த புதிய ஏற்பாடு.
புதிய EVM-களில் உள்ள முக்கிய மாற்றங்கள் என்னெல்லாம் தெரியுமா..
வண்ணப் புகைப்படங்கள்: வேட்பாளர்களின் புகைப்படங்கள் வண்ணத்தில் அச்சிடப்படும். புகைப்படத்தில் வேட்பாளரின் முகம் முக்கால் பாகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.
பெரிய, தடிமனான எழுத்துகள்: வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் NOTA (மேற்கண்ட எவரும் இல்லை) விருப்பம், 30 பாயிண்ட் அளவுள்ள தடிமனான எழுத்துகளில் இருக்கும். இது பார்வைக்குத் தெளிவாகவும், படிக்க எளிதாகவும் இருக்கும்.
சர்வதேச எண்கள்: வேட்பாளர்களின் வரிசை எண்கள் மற்றும் NOTA விருப்பம், சர்வதேச எண் வடிவங்களான 1, 2, 3... போன்றவற்றில் இடம்பெறும்.
வாக்குச்சீட்டு காகிதம்: வாக்குச்சீட்டுகள் 70 GSM எடையுள்ள இளஞ்சிவப்பு நிறக் காகிதத்தில், குறிப்பிட்ட RGB மதிப்புகளுடன் அச்சிடப்படும்.
இந்த மாற்றங்கள் முதற்கட்டமாக பீகார் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் பிறகு மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே பெயரைக் கொண்ட பல வேட்பாளர்கள் இருக்கும்போது குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பே புகைப்படங்கள் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வண்ணப் புகைப்படங்கள் மற்றும் பெரிய எழுத்துகள் மூலம் வாக்காளர்கள் மேலும் துல்லியமாகத் தங்கள் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த புதிய EVM இயந்திரங்கள், இந்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட உள்ளன.
ஆக மொத்தம் பீகார் தேர்தல் கலர்புல்லாக களை கட்டத் தொடங்கியுள்ளது.