பீகார் சட்டசபை தேர்தல் 2025.. 2 கட்டமாக நவம்பர் 6, 11 ல் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Su.tha Arivalagan
Oct 06, 2025,06:27 PM IST
பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

பீகார் சட்டசபையில் உள்ள 243 இடங்களுக்கான பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் தேர்தல் கமிஷன் உள்ளது. அதே சமயம் சாத் திருவிழா அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ளதால் அதற்கு பிறகு தேர்தலை நடத்தும் படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதே போல் தேர்தல் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் மொத்தம் 7.42 கோடி பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்றும், இவர்களில் 14 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இருப்பினும் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு வெளியிடப்படும் என இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இன்று செய்தியாளர்களை சந்தித்த ஞானேஷ்குமார், பீகார் தேர்தல் அமைதியாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படும். எந்த ஒரு தவறான தகவலும் பரவாமல் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம், மது போன்றவை வழங்குவதை தடுக்க அனைத்து செக் போஸ்ட்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.  என்று தெரிவித்துள்ளார். மேலும் பீகார் சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை அவர் அறிவித்தார். 

பீகார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் நவம்பர் 6ம் தேதியும், 2ம் கட்டம் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பீகார் சட்டசபை தேர்தல் 2025 அட்டவணை :

முதல் கட்ட தேர்தல்  - நவம்பர் 6
2ம் கட்ட தேர்தல்  - நவம்பர் 11
வேட்புமனு தாக்கல் - அக்டோபர் 10
மனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி - அக்டோபர் 22
வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 14