குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு
சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரைப் பறிக்க காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தின்உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்தன. சமீபத்தில்தான் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஸ்ரேசன் நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான சோதனையும் இன்றி செயல்பட்டு வந்துள்ளது என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகளின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.