கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

Su.tha Arivalagan
Feb 04, 2026,06:00 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலையொட்டி மேலும் 5 வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதையும் சேர்த்து இதுவரை 10 தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். ஜனவரி 18ம் தேதி தனது முதல் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில் கீழ்க்கண்ட உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன:


வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமையவுள்ள அஇஅதிமுக ஆட்சியில்,




- பொருளாதார சமநிலைக்கு உதவிட, குல விளக்குத் திட்டம்" வாயிலாக, ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தக்கூடிய மகளிருக்கு மாதம் ரூ.2000/- வழங்கப்படும்.


- மகளிருக்கு செயல்படுத்தப்படும் பேருந்து திட்டம் போன்றே, கல்வி, பணி, தொழில் நிமித்தமாக பயணிக்கும் ஆண்களுக்கு உதவிடும் வகையில், "ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம்" செயல்படுத்தப்படும்.


- ஏழை எளிய, நடுத்தர மக்களின் பெரும் கனவான "சொந்த வீடு" என்பதை நனவாக்கிட, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி, கிராமப்புறத்தில் கான்கிரீட் வீடும், நகர்ப்புறத்தில் அடுக்குமாடி வீடும் கட்டித் தரும் "அம்மா இல்லம் திட்டம்" திட்டம் மூலம் விலையில்லா வீடுகள் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.


- அஇஅதிமுக-வின் கோரிக்கை ஏற்று, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.


- வேலைக்கு செல்லும் பெண்களின் சுய சுதந்திரத்தை உறுதி செய்திடவும், இன்றைக்கு பல்வேறு பணிகளுக்கு அடிப்படை தேவையாக இருக்கக் கூடிய இருசக்கர வாகனத்தை அவர்கள் பெற்றிட வழிவகை செய்திடவும், "அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்" வாயிலாக ரூ.25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு வழங்கப்படும்.


இந்த நிலையில் இன்று அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்றைய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் இடம் பெற்றுள்ள உறுதிமொழிகள்:


- அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம். 


- முதியோர்களுக்கான சமூக பாதுகாப்பு உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும்.


- ஜல்லிக்கட்டு போட்டியின்போது, மாடுபிடி வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடையும் வீரர்களுக்கு ரூ.2 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும். 


- மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும். அந்தக் கடன் தொகையை மாநில அரசே செலுத்தும். 


- சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.


தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடாத நிலையில் அதிமுக அதிரடியான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.