கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
திண்டுக்கல்: அதிமுக.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் மட்டுமே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுக.,வால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில் திண்டுக்கலில் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
செங்கோட்டையனின் இந்த கோரிக்கை சரியானது தான் என ஓபிஎஸ், சசிகலா, பிரேமலதா விஜயகாந்த், நயினார் நாகேந்திரன் என அதிமுக.,வினர் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அதிமுக.,வின் உட்கட்சி விவகாரம் என்பதால் பாஜக தலைமை இதுவரை பெரிதாக தலையிடவில்லை. ஆனால் அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியின்போது ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
அதாவது ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், செங்கோட்டையன் குரல் கலகக் குரல் இல்லை. அவர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு எதிராக பேசினாரா.. .தலைமைப் பொறுப்பில் மாற்றம் தேவை என்று சொன்னாரா.. அப்படிச் சொல்லியிருந்தால்தான் அது கலகக் குரல். ஆனால் அவர் எடப்பாடி தலைமையில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றுதான் சொல்கிறார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருமைதானே என்றார் குருமூர்த்தி. இதன் மூலம் செங்கோட்டையனுக்கு பாஜக ஆதரவு இருப்பதாக மறைமுகமாக கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில். இப்போது வரை இபிஎஸ் மற்றும் அவரது தரப்பில் இருப்பவர்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இதனால் இபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதேசமயம், இன்று திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், விஜய பாஸ்கர் என முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பின்போது, செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதாகவும், உட்கட்சிப் பூசலை யாரேனும் வெளியில் பேசினால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
முன்னதாக, நேற்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த அதே நேரத்தில் ஆண்டிப்பட்டியில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த இபிஎஸ், கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்து விட்டு சென்று விட்டார். அவர் கம்பம் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது, சாலையில் கூடி இருந்த அதிமுக.,வினர் கட்சி மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என முழக்கமிட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை திண்டுக்கல்லில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் செங்கோட்டையன் விவகாரத்தில் இபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேசமயம், செங்கோட்டையனுக்கு செக் வைக்கும் திட்டமும் அதிமுகவிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, கட்சியில் இருந்து அதிருப்தியில் பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். அதற்கு பதிலாக ஈரோடு, கோபிசெட்டிபாளையம் பகுதியில் உங்களால் அதிமுக.,வில் இருந்து வெளியேறியவர்களை நீங்களும் அதிமுக.,விற்கு மீண்டும் அழைத்து வாருங்கள் என சொல்வதற்கும் வாய்ப்புள்ளது.
இபிஎஸ், ஈரோடு பகுதியில் இன்னும் 10 நாட்களில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். அதற்கு முன் முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காக தான் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போல் சாதகமான முடிவை அதிமுக தலைமை எடுத்தால் 10 நாட்களுக்கு பிறகு இபிஎஸ் ஈரோடு வரும் போது அந்த சுற்றுப் பயணத்தில் செங்கோட்டையனும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்யலாம்.