எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி

Su.tha Arivalagan
Oct 30, 2025,05:19 PM IST

பசும்பொன் : அதிமுக.,வில் எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர். 


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் ஒன்றாகப் பசும்பொன்னிற்கு சென்று, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பிறகு கூட்டாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகத்தில் எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைவதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். திமுக., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காக தான் மூவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதிமுக.,வில் பிளவுபட்ட சக்திகளை ஒன்றிணைப்பதில் சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படுவார் என்றார்.




பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன், துரோகத்தை வீழ்த்தவும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்துவதற்காகவும் தான் நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம். அதிமுக.,வில் பழனிச்சாமி தான் எங்களின் எதிரி. பிளவுபட்ட அதிமுக.,வை ஒன்றிணைப்போம். போக்குவரத்து நெரிசல் காரணமாக தான் சசிகலா பசும்பொன்னிற்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதிமுக.,வை ஒன்றிணைப்பதில் எங்களுடன் அவரும் ஒன்றாக இருப்பார். இப்போது தான் பருவ மழை துவங்கி உள்ளது. அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.


உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதுதான் ஐயாவின் சன்னதியில் ஆசிர்வாதம் வாங்கியுள்ளோம். இனி அடுத்தடுத்த நடவடிக்கைகளை நீங்கள் காண்பீர்கள் என்றார் தினகரன்.


தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ஏன் அவசரம், உங்களுக்கு இந்த அவசரம் கூடாது என்று ஓ.பி.எஸ். சிரித்தபடி பதிலளித்தார்.