இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

Su.tha Arivalagan
Mar 03, 2026,12:50 PM IST

டெல்லி:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வரும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.


அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக முட்டுக்கட்டை நிலவி வந்தது. குறிப்பாக, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்வதற்கான தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது குறித்தும், பாஜகவின் எதிர்பார்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.




அண்மையில் அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விளக்கங்களையும், உட்கட்சி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மை குறித்தும் ஈபிஎஸ் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் மற்றும் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முன் வைத்ததாக சொல்லப்படுகிறது.


இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவு தரும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.