திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Su.tha Arivalagan
Sep 25, 2025,03:51 PM IST

ஊட்டி: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரத்தில் பங்கு கேட்க ஆரம்பித்ததால் இந்த விரிசல் விழ ஆரம்பித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


உதகமண்டலத்தில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போதுதான் இப்படிக் கூறினார் அவர். இதுகுறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஐம்பது-ஐம்பது என்ற கோரிக்கையை வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி மற்றும் 117 இடங்கள் வேண்டும் என்று கேட்பதாக அவர் கூறுகிறார். இது மாநிலத்தின் 234 தொகுதிகளில் பாதி ஆகும்.

 



காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று கூறுகிறார். அதனால் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் பேசியுள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் ஆட்சியில் பங்கு கேட்டுப் பேசுகிறார். இப்போதுதான் அவர்களுக்கு ஞானம் வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்குள் விரிசல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் (திமுக) எவ்வளவு காலம் தான் கொள்ளையடிப்பார்கள்? விரக்தியடைந்த காங்கிரஸ் விழித்துக்கொண்டு அதிகாரத்தில் பங்கு கேட்கிறது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.


செந்தில் பாலாஜியால் புதுக் குழப்பம்


இதற்கிடையே கரூரில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் தலைவி எஸ். கவிதாவை காங்கிரஸில் இருந்து விலகிய பின் திமுகவில் சேர்த்தார். கவிதா திமுகவில் இணைந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் செந்தில்பாலாஜி வெளியிட்டார். இது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவை பின்னர் செந்தில் பாலாஜி நீக்கி விட்டார்.


கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். இது கூட்டணிக்கு அவமானம் என்று அவர் கூறினார். "கூட்டணி தர்மம் இரு தரப்பிலும் இருக்க வேண்டும். திமுக மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர், காங்கிரஸை இப்படி பகிரங்கமாக அவமானப்படுத்துவதை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரில் இதுபோன்ற அவமரியாதையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று அவர் கூறினார். எந்தவொரு கூட்டாண்மைக்கும் கொள்கைகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இதில் தலையிட வேண்டும் என்றும், இதுபோன்ற நடத்தைகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.