அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்

Su.tha Arivalagan
Nov 20, 2025,12:01 PM IST
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் மாத இறுதியில், அதாவது நவம்பர் 27 அல்லது 28 ஆம் தேதி அன்று, திருவள்ளூரில் இருந்து தனது தொகுதி வாரியான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். 

வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, வானிலை நிலவரத்தைப் பொறுத்து இந்த அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, 41 பேர் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பயணத்தை அவர் தொடங்கப் போகிறார். மக்களைக் காப்போம்; தமிழ்த்தாயை மீட்போம் என்ற பெயரில் ஜூலை மாதம் கோவையில் தொடங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம், இதுவரை 174 சட்டமன்றத் தொகுதிகளை எட்டியுள்ளது. 






தனது பிரச்சாரக் கூட்டங்களில் திமுக அரசை கடுமையாக சாடிப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பணவீக்கம், ஊழல், வாரிசு அரசியல் மற்றும் தொழில் தேக்கம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகிறாார். 

தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவை குறித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டக் கூடும் என்று தெரிகிறது. கூடவே திமுக அரசை சாடுவதையும் அவர் தொடரக் கூடும். 

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள தொகுதிகளை ஒரு நாளைக்கு இரண்டு என்ற வீதத்தில் அவர் நிறைவு செய்ய இலக்கு வைத்துள்ளார்.