மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

Meenakshi
Jan 22, 2026,03:27 PM IST

சென்னை: மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சி. இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை இந்த தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு வழங்குவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை நிறுவுவதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.




இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு காலை விருந்து அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், நாளை நடைபெறுகின்ற கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கூட்டமாக இருக்கும். இந்த கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணிக்கு அச்சாணியாக அமையும்.


இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது. இன்றைக்கு சிறுமிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் எல்லா துறைகளிலும் தோல்வியை கண்டுவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. எங்களுடைய கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சி... இதுநாள் வரை இல்லாத வளர்ச்சியை இந்த தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.