திமுகவினரிடம் இருந்து மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
May 27, 2025,06:01 PM IST

சென்னை: இந்த ஆட்சி முடியும் வரை திமுகவினரிடம் இருந்து மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.


திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றுகிறான்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறான்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது- திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது- 




திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத  துப்பாக்கி இருக்கிறது! 

போதை இளைஞரிடம் கத்தி- பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது .


இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு மு.க.ஸ்டாலினிக்கு கோபம் வருகிறது?


இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா 


ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில்,பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!


திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார். சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.


நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்  குறிப்பாக திமுகவினரிடம் இருந்து! என்று தெரிவித்துள்ளார்.