செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பேசுகையில், அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
இன்னும் 10 நாட்களில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒருமித்த கருத்து கொண்டவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவோம். பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக ஆலோசனை கூட்டம் இன்று நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் செங்கோட்டையனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.