திமுக அரசு மீது ஊழல் புகார்: கவர்னரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Jan 06, 2026,01:19 PM IST

சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து பரபரப்பு மனு ஒன்றை அளித்தார். இந்தச் சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.ஊழல்களுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதால், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியுள்ளோம். ஊழல் செய்வதைத் தவிர, தமிழக மக்களுக்கு திமுக அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை; திமுக என்பது விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி என்று அவர் கடுமையாகச் சாடினார்.




ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவில், திமுக அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊழல் பட்டியல் மட்டுமின்றி ஊழலில் ஈடுபட்டதாக திமுக அமைச்சர்கள் சிலரது பெயர்களும் கவர்னரிடம் அளிக்கப்பட்ட மனுவில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. 


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில், தற்போது திமுக அரசு மீது ஊழல் புகாரை மனுவாக எழுதி அதை கவர்னரிடம் அதிமுக சமர்பித்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாஜக.,வும் திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக அளித்துள்ள புகார் மனு மீது கவர்னர் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பார், இதன் தாக்கம் தமிழக அரசியலில் எப்படி எதிரொலிக்கும் என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் எதிர்நோக்கி உள்ளது. 


ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றன. இந்த சமயத்தில் ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் அதிமுக அளித்திருப்பது திமுக அரசிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.