தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Jan 21, 2026,01:56 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, வரும் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த முக்கிய அரசியல் நகர்வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மனமுவந்து வரவேற்றுள்ளார்.


இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து அவர் கூறுகையில், "மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என சூளுரைத்துள்ளார்.




எடப்பாடி பழனிசாமியின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ள டிடிவி தினகரன், "ஒன்றிணைந்து களப்பணியாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை NDA கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம்" எனக் கூறியுள்ளார்.


நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் பொது எதிரியான திமுகவை வீழ்த்த கைகோர்த்துள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை நோக்கிய இந்த மெகா கூட்டணி, தமிழகத்தின் அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.