குழந்தைகள் தின விழா:குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி தான் எதிர்கால வெற்றியாகும்:சார்பு நீதிபதி பேச்சு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியிலும் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், ஆசிரியை வள்ளி மயில் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கவிதை, பேச்சு, ஓவியம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தேவகோட்டை சார்பு நீதிபதி கலைநிலா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி தான் எதிர்கால வெற்றியாகும். இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தூண்கள். நாம் கல்வி கற்றால் தான் நம்மையும் பார்த்துக் கொண்டு மற்றவர்களையும் பார்க்க முடியும். நாம் தவறு செய்தால் கண்டிப்பாக நமக்கு தண்டனை கிடைக்கும். நாம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் ஆசிரியர் நம்மை கண்டிப்பார்கள். நாம் ஏன் அந்தத் தவறை செய்ய வேண்டும். தவறு செய்தால் தானே தண்டனை கிடைக்கிறது. தவறே செய்யாமல் அந்தப் பக்கமே போகாமல் இருந்தால் நமக்கு சட்டம் அரணாக இருக்கும்.
நாம் பள்ளிகளில் சீருடை அணிவதே நாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நம்மிடம் எந்த வேற்றுமையும் இருக்கக்கூடாது. சிறுவயதிலேயே எந்த வேற்றுமையும் பார்க்காமல் வாழ்ந்தால் தான் நான் பெரிய வயதிலும் பின்பற்ற முடியும். நாம் நமக்கென்று ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உறுதிமொழியை சரியாக பின்பற்ற வேண்டும். சிறு, சிறு கூட்டங்களை போட்டு நல்லவற்றை பழக வேண்டும். முதலில் நம்முடைய படிப்புதான் முக்கியம். பிறகு ஒழுக்கம் மிக மிக முக்கியம். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரை எடுத்து தர வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.
நம் பெற்றோர் நம்மை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். அவர்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வாங்கித் தருகிறார்கள். ஆசைப்பட்டு கேட்டால் அவர்களால் வாங்கித் தர இயலாது. நாம் ஆசைப்பட்டால் பிரச்சனைதான் வரும். நம்ம பெற்றோரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும். நாம் கண்டிப்பாக 14 வயது வரை படிக்க வேண்டும். யாரேனும் படிக்காமல் இருந்தால் நாமே அவர்களை படிக்க வைக்க வேண்டும். கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது. முதலில் நம்முடைய படிப்பு தான் முக்கியம். பிறகு ஒழுக்கம் மிக மிக முக்கியம்.
போக்சோ சட்டம் பற்றி நமக்கு ஓரளவுக்கு தெரியும். நம் பெற்றோர்களை மட்டுமே நாம் நம்ப வேண்டும். தெரியாதவர்கள் ஏதேனும் கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது. சட்டம் என்பது மக்களைப் பாதுகாக்கத் தான். எனக்கு தப்பு என்று தெரியும். ஆனால் அதை தான் செய்வேன் என்றால் சட்டம் கைகொடுக்காது. நாம்தான் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தைகள் சொன்னால் பெற்றோர்கள் கூட கேட்பார்கள். நமக்கு ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால் தட்டிக் கேட்கனும்.
படிப்பைத் தவிர நமக்கு எதுவும் முக்கியமில்லை. நாம் ஜவஹர்லால் நேருவைப் போல ஆகவேண்டும் என்றால் சாதனையாளராக மாற வேண்டும். நானும் நன்றாக இருப்பேன். என்னை சார்ந்தவர்களையும் நன்றாக வைத்து இருப்பேன் என்ற எண்ணம் வேண்டும். செல்போன் பார்ப்பதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையை நமக்காக பயணிக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். கல்வி முக்கியம். அதைவிட ஒழுக்கம் மிக மிக முக்கியம். சட்டம் நமக்கும் எப்போதுமே பாதுகாவலர் தான் என்று தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை சார்பு நீதிமன்ற முதுநிலை நிர்வாக உதவியாளர் மணிமேகலை மற்றும் சட்ட தன்னார்வலர் வித்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவ மாணவியரின் கவிதை, பேச்சு ஆகியவை கேட்டு நீதிபதி பாராட்டினார்.ஓவியம் வரைந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.