பெருகும் முதியோர் இல்லங்கள்.. வருத்தம்தான்.. ஆனாலும் ஒரு பாசிட்டிவ் பாயின்ட் இருக்கே!

Su.tha Arivalagan
Jan 08, 2026,10:05 AM IST

- தி.மீரா


இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்புகள் பெரிதும் மாறிவிட்டன. கூட்டு குடும்பங்கள் குறைந்து, தனிக் குடும்பங்கள் அதிகரித்துள்ளதால் முதியோர்களை கவனிப்பது பல குடும்பங்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இப்படியான சூழ்நிலையில் முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளன. பலரின் பார்வையில் இது வருத்தமளிக்கும் மாற்றமாக தோன்றினாலும், உண்மையில் முதியோர் இல்லத்தின் வருகை பல விதங்களில் நன்மையாகும்.


முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகள் முறையாக வழங்கப்படுகின்றன. வீட்டில் தனிமையில் தவிக்கும் முதியோருக்கு, இங்கு அவர்களுடன் வயதிலும் அனுபவத்திலும் ஒத்தவர்களின் நட்பு கிடைக்கிறது. இதனால் மனச்சோர்வு குறைந்து, மனநிறைவு அதிகரிக்கிறது.




மேலும், சில முதியோர்கள் உடல் நலக் குறைவு அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுவோர் ஆவார்கள். வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எப்போதும் அவர்களை கவனிக்க இயலாத சூழலில், முதியோர் இல்லங்கள் சிறந்த தீர்வாக அமைகின்றன. பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான பராமரிப்பு வழங்கப்படுவது ஒரு முக்கிய நன்மையாகும்.


முதியோர் இல்லங்கள் பெற்றோரைக் கைவிடும் இடமாக அல்ல; அவர்களுக்கு மரியாதையுடன் வாழும் வாய்ப்பை வழங்கும் இடமாகப் பார்க்க வேண்டும். தன்னிச்சையாக, விருப்பத்துடன் இவ்விடங்களில் வாழத் தேர்வு செய்கிற முதியோர்களும் இன்று அதிகரித்து வருகின்றனர். இது அவர்களின் சுயமரியாதையையும் சுயநிலையையும் பாதுகாக்கிறது.


முடிவாக, முதியோர் இல்லத்தின் வருகை சமூக மாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். குடும்ப அன்பை மாற்ற முடியாவிட்டாலும், முதியோர் இல்லங்கள் முதியோரின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கு ஒரு நல்ல துணையாக அமைகின்றன. ஆகவே, சரியான முறையில் செயல்படும் முதியோர் இல்லங்களின் வருகை நன்மையே ஆகும்.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)