ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!

Meenakshi
Sep 01, 2025,06:23 PM IST

டெல்லி: ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் கட்டாயம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வழக்குகளை  தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தாலும், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்குகளுக்கு எல்லாம் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.




அதில் முக்கியமாக ஆசிரியர் பணியை தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் அதிகமாக காலம் உள்ள பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஒய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுகொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


அத்துடன், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்விற்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.