இறுதிக்கட்டத்தை எட்டிய வடகிழக்கு பருவமழை... ஜனவரி 9 மற்றும் 10ம் தேதியுடன் முடிய வாய்ப்பு!

Meenakshi
Jan 07, 2026,12:32 PM IST

-சுமதி சிவக்குமார் 


சின்னசேலம் : தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை ஜனவரி 9 மற்றும் 10ம் தேதியுடன் முடிய வாய்ப்புள்ளது.


ஜனவரி 5ஆம் தேதி திங்கள் கிழமை மாலை வங்கக்கடலில்  உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஜனவரி 6 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் ஜனவரி 7 ஆம்தேதி இன்று புதன்கிழமை மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களும் இலங்கைக்குள் நோக்கிப் பயணித்து அதன் பிறகு 9 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வரை உள்ள வங்கக்கடல் பகுதியில் உள் நுழைந்து அரபிக் கடலை நோக்கி பயணம் செய்யும்.




இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்டா பகுதிகளிலும் அதன் அருகில் உள்ள வட மாவட்டங்களிலும் மழை ஆரம்பமாகும். அதன் பிறகு ஜனவரி 10 ஆம் தேதி சனிக்கிழமையும், ஜனவரி 11ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் சென்னை முதல் ராமநாதபுரம் வரை கடற்கரை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் வட உள் மாவட்டங்களான  சேலம், நாமக்கல் பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவை காணலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மொத்தத்தில் வடகிழக்கு பருவ மழையின் இறுதிச்சுற்று, இன்று இறுதிக்கட்ட நிலையை எட்டி உள்ளதால் தமிழகத்தில் ஒரு நான்கு நாட்கள் நல்ல மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம். ஜனவரி 9 வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 12ம் தேதி திங்கள்கிழமை வரை இந்த வடகிழக்கு பருவமழை நல்ல மழை பொழிவை கொடுத்து விட்டு இறுதிக் கட்டத்தை நிறைவு செய்து பருவ மழை காலம் விலகிச் செல்லும். ஜனவரி 13ஆம் தேதி முதல் மீண்டும் இயல்பான வானிலைக்கு வந்து விடும் சூழல் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.