சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!

Su.tha Arivalagan
Oct 29, 2026,04:54 PM IST

- அ.சுபாலட்சுமி


இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் சொர்க்கம் தேனி மாவட்டம். எங்கே பார்த்தாலும் மலையாலும் இயற்கையாலும் சூழ்ந்திருக்கும் அழகிய ஊர். சென்னை தி நகர் போல் எங்கள் ஊரில் எடமால் தெரு.  எப்போதும் கூட்டம் தான் அதிலும் பண்டிகை காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை சிறு தெருவில் அலைமோதும் பெரிய கூட்டம்.


ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் சிறு சிறு வியாபாரங்கள். அந்த இடத்திற்கு அருகில் பிரதான சாலையில் எங்கும் ஒளிவிளக்கால் ஜொலிக்கும் நகை கடைகள். மீனாட்சி சொக்கநாதரை காண மதுரை செல்ல வேண்டியதில்லை அதுவும் எங்கள் தேனியில் இருக்கிறது.


வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்:




சித்திரை மாதத்தில் களை கட்டும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா. அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இருக்கும். அதிலும் மக்கள் அலைமோதிக் கொண்டே இருப்பார்கள்.


ஒரு புறம் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, அங்கப்பிரதட்சணம் போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள். மற்றோர்புறம் திருவிழாக் கடைகள் மற்றும் ராட்டிணங்கள். இரவு பகலாக நடக்கும் திருவிழா.


கைபேசியை பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கவைக்கும் கணவாய் எங்கள் மாவட்டத்தின் இன்னொரு பெருமை.


கணவாய், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பசுமையான மலைப்பகுதிகள், குளிர்ச்சியான காற்று மற்றும் ரம்யமான பயண அனுபவத்திற்கு இப்பகுதி மிகவும் பிரபலமானது.


இப்பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு தர்மசாஸ்தா (ஐயனார்) கோவில் அமைந்துள்ளது. மொபைலை பார்த்துக்கொண்டு பயணம் செய்வதில் இயற்கையை யாரும் ரசிப்பதில்லை என்பதால் மொபைல் சிக்னலை துண்டித்து விடும் இடம் இந்த கணவாய்.


தேனி ஒரு அழகிய தேவதை போல.. மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, ரமக்கல் மேடு, தேக்கடி என உச்சி முதல் உள்ளங்கால் வரை  பல அணிகலன்களை அணிந்து இன்னும் பேரழகாய் தோற்றமளிக்கும் பெரும் அழகி அவள்.


தென்மேற்கு பருவ காற்று தேனி பக்கம் வீசும் போது சாரல் இன்ப சாரல்.......




அட ஆமாங்க, மழைக் காலத்தில் தேனி பக்கம் வந்து பாருங்க. சொக்கிப் போய்ருவீங்க. ரம்மியமாய் காட்சிதரும் எங்கள் தேனி மாவட்டம். இயற்கை அழகு கண்ணுக்கு மகிழ்ச்சி தரும், மலர்களின் வாசம் மூக்கிற்கு இதம் தரும், சில்லென்ற காற்று மற்றும் மழை தூரல் உடலுக்கு குளிர்ச்சி தரும் அனைத்தும் சேர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும் சொர்க்க பூமி எங்கள் தேனி மாவட்டம்.


கைபேசிகிட்டயே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதை சற்றுத் தூக்கிப் போட்டு விட்டு, மறக்காமல் எங்க தேனி மாவட்டத்திற்கு வந்து இயற்கையோடு பேசிட்டு போங்க.. புத்துணர்ச்சி ஆயிடுவீங்க.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)