பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெண்களைக் கவரும் வகையிலும், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பயன் தரும் வகையிலும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஐந்து முக்கிய அறிவிப்புக்களை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 இரு சக்கர வாகனம் வாங்க மானியம். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்க்ரீட் வீடு கட்டி தரும் ஆகிய அறிவிப்புக்களையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
மகளிருக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை :
அதிமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியாக, "மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விட கூடுதல் தொகையை வழங்குவதன் மூலம், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதே அதிமுகவின் நோக்கம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். "அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படும்" என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் :
மற்றொரு புரட்சிகரமான அறிவிப்பாக, "ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்" என அவர் அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பயனை ஆண்களுக்கும் விரிவுபடுத்துவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வரும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் வேலைகளையும், மக்களின் ஓட்டுக்களை பெறும் பணிகளையும் அதிமுக செய்ய துவங்கி உள்ளது. அதிமுக.,வின் நிறுவன தலைவரான எம்ஜிஆரின்., 109வது பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்புக்களை அதிமுக வெளியிட்டுள்ளது. சாமானிய மக்களை கவரும் வகையில் அதிமுக வெளியிட்டுள்ள, இலவசப் பேருந்து பயணம் மற்றும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள உரிமைத்தொகை ஆகியவை பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என அதிமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.