சூப்பர் முதல்வர் என சொல்லிக் கொள்ளும்...எடப்பாடி பழனிச்சாமி கிண்டல்

Su.tha Arivalagan
Jan 20, 2026,11:35 AM IST

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாலும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜனவரி 20, 2026) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். தமிழகம் இன்று போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இந்த போதைப் பொருள் கலாச்சாரமே மாநிலத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்க முதன்மைக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.




மாநிலத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அரசு, இதில் முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னைத் தானே நாட்டின் "சூப்பர் முதல்வர்" என்று நினைத்துக் கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார். விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர், கள நிலவரத்தை உணர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.


சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களின் போராட்டங்களை வலுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களை அதிமுக கையில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மற்றொரு புறம் சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுக்கு எதிரான நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.