ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
Jan 29, 2026,05:59 PM IST
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), ஆளுங்கட்சியான திமுக, புதிய அரசியல் வரவான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இன்று அளித்த ஒரே பேட்டியில் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாரிசு அரசியல் புகாரை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலினுக்கு நிர்வாக அனுபவம் கிடையாது" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தனது தந்தை முதல்வராக இருந்த காரணத்தினாலேயே பதவிக்கு வந்ததாகவும், ஆனால் தான் ஒரு சாதாரண விவசாயியாக இருந்து கடும் உழைப்பால் இந்த நிலையை எட்டியவன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "கல்விக் கடன் ரத்து மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை" என்று கூறிய அவர், நிர்வாகத் திறமையின்மையால் தற்போதைய ஆட்சி ஸ்தம்பித்துப் போயுள்ளதாகக் குற்றம் சாட்டினார். "கால்களைப் பார்த்தால் தான் சரியான பாதையில் நடக்க முடியும்; மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும்" என்று கூறி முதல்வரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
தமிழக அரசியலில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் குறித்துப் பேசிய இபிஎஸ், "விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ளதாகச் சொல்வது யாருக்காக?" எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத விஜய், ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். சிறந்த அரசியல் கட்சி என்பது அதிமுக-தான் என்றும் அவர் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியிலும், அதிமுக.,விலும் இணைய தான் தயாராக உள்ளதாகவும், நீங்கள் தயாரா என ஓபிஎஸ் கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக, "ஓ.பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் மூன்று அரசியல் தலைவர்கள் பற்றிய எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிப் பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 2026 தேர்தலை நோக்கிய பயணத்தில், அதிமுக தனது பலத்தை நிலைநாட்டவும், எதிர்த்தரப்புகளை வீழ்த்தவும் தயாராகி வருவதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன.