எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

Su.tha Arivalagan
Jun 18, 2026,01:14 PM IST

சென்னை: தமிழகத்தில் தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆளுநர் உரையில் மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


ஏமாற்றமளிக்கும் ஆளுநர் உரை :

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிதாக எந்தவொரு திட்டங்களும், மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில் என்ன இருந்ததோ, அதுதான் தற்போதைய ஆளுநர் உரையிலும் மீண்டும் இடம் பெற்றுள்ளது" என்று சாடினார். மேலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


சட்டம் ஒழுங்கு சீர்கேடு – புள்ளிவிவரங்களுடன் சாடல்




தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்துப் பேசிய அவர், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் முன்பை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 38 நாட்களில் மட்டும் மாநிலத்தில் நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.


- பாலியல் வழக்குகள்: 150 வழக்குகள் பதிவாகியுள்ளன.

- கொலைகள்: 130 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

- பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 276 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இவ்வளவு மோசமான நிலையை எட்டியிருந்தும், அதைக் கட்டுப்படுத்த தவெக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என அவர் வேதனை தெரிவித்தார்.


அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது!

அதிமுகவின் அரசியல் பலம் மற்றும் எதிர்காலம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக என்பது மிகவும் வலிமையான, கட்டுக்கோப்பான கட்டமைப்புள்ள ஒரு பேரியக்கம். எந்தவொரு கொம்பனாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது" என்று மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்தார். மேலும், "சிலர் தவறான சிந்தனையில் அதிமுகவை வீழ்த்தி விடலாம் என்று இருந்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று மறைமுகமாக மாற்று அரசியல் சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.