இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

Meenakshi
Mar 04, 2026,06:31 PM IST

சென்னை: திருச்சியில் ரயில்வே நுழைவு வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என்று தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தி பெயரை, மொழிபெயர்த்து, தமிழிலேயே குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசை  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


திருச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், பாஜகவின் மூத்த தலைவரான  தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஹிந்தியில் உள்ள பெயரை அகற்ற ரயில்வே ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,




புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.


தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.


இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது

இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.


மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். 


உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.


இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.


எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.