அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

Su.tha Arivalagan
Jan 23, 2026,06:12 PM IST

மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். திமுக.,விற்கு இது தான் கடைசி தேர்தல். வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.


கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். "மக்களை வாட்டி வதைக்கும் இந்த ஆட்சி தேவையா?" என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவின் ஆட்சிக்காலம் முழுவதும் துன்பம், வேதனை மற்றும் ஊழல் மட்டுமே நிறைந்திருப்பதாகச் சாடினார். மேலும், "வருகின்ற தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் அந்த கட்சிக்கு இறுதித் தேர்தலாக அமையும்" என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை குறித்துப் பேசிய அவர், "பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும், இயற்கையே சூரியனை (திமுகவின் சின்னத்தைக் குறிப்பிடும் வகையில்) மறைத்துவிட்டது" என்று குறிப்பிட்டார். இது அந்த பகுதியில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. தேர்தல் வெற்றிக் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய இபிஎஸ், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என்று கணித்துள்ளார்.




அதிமுக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 210 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும். ஒரு குடும்பம் பலனடைய வேண்டும் என்பதற்காக 8 கோடி மக்கள் அவதிப்பட வேண்டும். திமுக அரசு கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியின் போது மத்திய அரசிடம் நல்ல உறவை கடைபிடித்தது. அதனால் மத்திய அரசிடம் பல திட்டங்களையும், நிதியையும் பெற முடிந்தது. 


திமுக.,வின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் தமிழக மக்களுக்கு துன்பத்தை மட்டுமே கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. எதன் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. இது தான் அவர்கள் சந்திக்கும் கடைசி தேர்தல். இந்த தேர்தலுக்கு பிறகு திமுக.,விற்கு குடும்ப, கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். என்டிஏ கூட்டணி பலமாக உள்ளது. பிரதமர் மோடியின் துணையுடன் மாபெரும் வெற்றியை பெருவோம் என்றார்.