"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Su.tha Arivalagan
Jul 14, 2026,06:42 PM IST

சேலம்: தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை ஆக்ரோஷமாகப் பகிர்ந்து கொண்டார்.


செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். "தற்போது தமிழகத்தில் உண்மையில் ஒரு ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகமே மக்களுக்கு எழுந்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.




தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் மக்கள் பணி குறித்துக் குறிப்பிடுகையில், "அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் மக்கள் தரப்பில் நின்று, மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், சேலம் மாவட்டத்தில் எப்போதும் அதிமுக பலமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சேலம் மாவட்டத்தில் அதிக இடங்களை அதிமுக வென்று சாதனை படைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார். விஜய்யை "களவாணி" என்று விமர்சித்த அவர், சுயபலத்தில் அரசியல் செய்யாமல் குறுக்கு வழியில் விஜய் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக-திமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக ஒரு தீயசக்தி என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


"அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு, மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற நமது எம்.எல்.ஏ-க்களை விஜய் தொடர்ந்து களவாடி வருகிறார். மக்களுக்குத் தேவையான எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையையும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே பேசி விஜய் அரசியல் நடத்தி வருகிறார். அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுக.,வில் இருந்து தவெக.,வுக்கு சென்றவர்களுக்கு முதல்வர் விஜய் அல்வா கொடுத்து விட்டார்" என்று எடப்பாடி பழனிசாமி மிகக் காரசாரமாகத் தாக்கினார்.


சேலத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுவரை அதிமுக.,வில் இருந்து ராஜினாமா செய்து விட்டு தவெக பக்கம் சென்றவர்களை மட்டுமே விமர்சித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல் முறையாக முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதே போல் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனும் தவெக.,வை சேர்ந்த ஆனந்த் போன்ற அமைச்சர்கள் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.