15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் தான் நீண்ட காலமாக வசித்து வந்த 'செவ்வந்தி' அரசு இல்லத்தை அதிகாரப்பூர்வமாகக் காலி செய்துள்ளார். சுமார் 15 ஆண்டு கால நினைவுகளோடு இந்த இல்லத்திலிருந்து அவர் வெளியேறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
15 ஆண்டு காலத் தொடர்பு :
கடந்த 2011ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது அவருக்குச் சென்னை பசுமைவழிச் சாலையில் (Greenways Road) உள்ள 'செவ்வந்தி' இல்லம் அரசு பங்களாவாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும், தொடர்ந்து 2017 முதல் 2021 வரை தமிழகத்தின் முதலமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்த காலங்களிலும் இதே இல்லத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார். 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையிலும், எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியில் இந்த பங்களாவிலேயே அவர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
திடீர் காலி பின்னணி :
2011 முதல் தற்போது (2026) வரை கடந்த 15 ஆண்டுகளாகப் பசுமைவழிச் சாலை 'செவ்வந்தி' இல்லமே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வின் முக்கிய மையமாக விளங்கியது. கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, முக்கிய ஆலோசனைகள் எனப் பரபரப்பாகக் இயங்கி வந்த இந்த இல்லத்தை, அவர் தற்போது முழுமையாகக் காலி செய்து விட்டுத் தனது சொந்த இடத்திற்கு மாறியுள்ளார். முன்னதாக, பங்களாவை காலி செய்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (26.06.2026) அனைத்துப் பொருட்களும் அங்கிருந்து பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் முக்கியத்துவம்
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எழுச்சிக்கும், அதிமுகவின் முக்கியப் பொதுக்குழு முடிவுகளுக்கும் சாட்சியாக இருந்த இந்த இல்லம் காலி செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே சற்றே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு பங்களா விரைவில் பொதுப்பணித்துறையிடம் (PWD) முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த இல்லம் தகுதி வாய்ந்த பிற அமைச்சர்களுக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.