நம்மைக் காக்கும் காவல் தெய்வம்.. என் உயிர்த் தோழன்!
- ஈரோடு மாலதி
எல்லோரும் அழகுக்காகவும், செல்லத்திற்காகவும் வெவ்வேறு வகையான வெளிநாட்டு நாய்க்குட்டிகளை வளர்க்க விரும்புவார்கள். ஆனால், நான் வளர்ப்பது நம்மூர் நாட்டு நாய்களைத்தான். தமிழ்நாட்டில் காவல் தெய்வமாகவும், ஊருக்குள் கெட்ட விஷயங்களோ திருடர்களோ நுழையாமல் காப்பதாகவும், நம்முடன் இணையாக ஒரு தோழனாகவும், நம்பிக்கையும் நன்றியும் உள்ள ஜீவனாகவும் இவை விளங்குகின்றன.
அதிலும், யாராலும் வளர்க்க முடியாமல், தாயில்லாமல் அனாதையாகத் தவிக்கும் நாய்க்குட்டிகளை வளர்ப்பதையே நான் அதிகம் விரும்புவேன். எனக்குக் கருப்பு நிற நாய்கள்தான் மிகவும் பிடிக்கும்; ஆனால் என்னிடம் வந்து சேர்வதெல்லாம் வெள்ளை நிற நாய்களாகவே இருக்கும்.
முதலில் என்னிடம் வந்தது ஒரு மாதக் குழந்தை; பால் கூடக் குடிக்கத் தெரியாத பருவம். அவனுக்குச் 'சூரியபைரவன்' என்று பெயரிட்டேன். ஆரம்பத்திலிருந்தே குடும்பத்தில் ஒருவனாக, மிகுந்த அன்போடு பழகினான். எண்ணெய் இல்லாத மொறுமொறுப்பான சப்பாத்தி, நல்ல எலும்பு, புளிக்காத தயிர் சாதம், நன்கு குழைந்த பால் சாதம் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுவான். ஒருவேளை சாப்பிட்டாலும் திருப்தியாகச் சாப்பிடுவான். பிஸ்கட் அவனுக்கு மிகவும் பிடித்த உணவு.
நான் எங்கு சென்று திரும்பினாலும், தன் முன்னங்கால்களைத் தூக்கி என்னைக் கட்டித் தழுவிக்கொள்வான். அவனது தலையையும் தோல்களையும் மென்மையாக நீவிவிட்டால், அமைதியாக உறங்கிவிடுவான். அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரேனும் வந்துவிட்டால், வாசல் கதவின் (கேட்) அருகிலேயே நின்றுகொண்டு, அவர்கள் போகும் வரை நகர மாட்டான்.
ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும். மின்விளக்கு போடும் நேரம். எனக்கு இயற்கையோடு தரையில் படுப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் நிலத்தில் படுத்திருந்தேன். அப்போது ஒரு பாம்பு வந்துவிட்டது. அதைப் பார்த்த சூரியபைரவன் விடாமல் குரைத்து எனக்குக் காட்டினான்; அருகில் சென்று கடிக்கவும் முயன்றான். நான் அவனைத் தடுத்து, "பாவம் விட்டுவிடு, தெரியாமல் வந்துவிட்டது, நம்மை ஒன்னும் தொந்தரவு செய்யவில்லை, வெளியே கொண்டு போய் விட்டுவிடலாம்" என்று சொல்லி, அந்தப் பாம்பைப் பிடித்துத் தூரமாக விட்டுவிட்டோம்.
இன்னொரு நாள், அவனை வீட்டில் விட்டுவிட்டுக் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டோம். அவனுக்காக வெளியே ஒரு மெத்தை (பெட்) போட்டிருந்தோம். தனிமையில் விட்டுவிட்ட கோபத்தில், அந்த மெத்தையைப் பஞ்சு பஞ்சாகத் தனித்தனியாகப் பிய்த்துப் போட்டுவிட்டான்.
அவனும் என்னுடன் சந்தைக்கும், மளிகைக் கடைக்கும் வருவான். வண்டியில் நான் எப்படி உட்கார்ந்திருக்கிறேனோ, அதேபோல அவனும் கம்பீரமாக உட்கார்ந்து வருவான். ஊரில் இருப்பவர்கள் எல்லாம் அவனை அதிசயமாகப் பார்ப்பார்கள்; சிலர் சிரிப்பார்கள், கிண்டல் செய்வார்கள். ஆனால், நான் அதைப் பொருட்படுத்தாமல் அவனது அறிவை நினைத்து ரசிப்பேன்.
அவனுக்குக் கோபம் வந்துவிட்டால் மாடிக்குச் சென்று உட்கார்ந்து கொள்வான்; சாப்பிடக்கூட வர மாட்டான். அப்போது அவனை அருகில் உட்கார வைத்துப் பத்து நிமிடம் பாடம் எடுப்பேன். "நீ செய்வது சரியில்லை தம்பி. இப்படிச் செய்தால் எனக்குக் கோபம் வரும், நான் உன்னை அடிப்பேன். நீ மட்டும் எல்லோரையும் மிரட்டுகிறாய்; நான் சொன்னால் ஏன் கேட்க மாட்டேன் என்கிறாய்?" என்று சைகைகளால் அவனிடம் பேசுவேன். சில நேரங்களில் நான் அழும்போது, தன் கால்களைத் தூக்கி என் கண்களைத் துடைப்பான். அவனுக்குள் இருந்த பாசம் அவ்வளவு புனிதமானது, ஆனந்தமானது.
சில சமயம் நான் அவன் மடியில் படுத்துக்கொள்வேன்; அவனும் என் மடியில் படுத்துக்கொள்வான். இருவரும் பேசிக்கொள்வோம், ஓடிப் பிடித்து விளையாடுவோம். சில நேரங்களில் விளையாட்டாக என்னைத் தள்ளிவிடுவான்.
இப்படி இனிமையாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. ஒருநாள் நான் திருமண நிகழ்வுக்காக வெளியே சென்றிருந்தேன். எங்களுக்குத் தெரியாமல் அவன் பக்கத்துத் தோட்டத்திற்குள் சென்றுவிட்டான். அங்கே வைக்கப்பட்டிருந்த விஷத்தைச் சாப்பிட்டு இறந்துவிட்டான். இறக்கும் தருவாயில் என் கணவரின் மடியில் துடிதுடித்து உயிரைவிட்டான். அன்றுதான் என் கணவர் அவனிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை முதன்முறையாகப் பார்த்தேன். என் பாசத்தைவிட அவரது பாசம் மிகவும் ஆழமாகவும் புனிதமாகவும் இருந்ததைக் கண்டு வியந்தேன்.
அவனுக்குப் பிறகு மீண்டும் 'பைரவன்' வந்தான். பின்னர் 'வெள்ளையன்', 'கருவாச்சி' வந்தார்கள். கருவாச்சி மிகவும் உஷாரானவள். அடுத்ததாகச் 'செல்வி', ஒரு சென்னைப் பெண் நாய்க்குட்டி, 'மணி' எனப் பலர் வந்தார்கள். இரவு 11 மணி ஆனாலும், நான் எங்கு நின்றாலும் இந்த ஆறு பேரும் என்னை விட்டுப் பிரிய மாட்டார்கள். இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெரு வரை யாராவது என்னைப் பின்தொடர்ந்தாலோ அல்லது திட்டினாலோ, முதலில் 'ஜெய்' குரைக்க ஆரம்பிப்பான்; தொடர்ந்து மணி, ஆட்டி மற்றும் பக்கத்து வீட்டு 'ராக்கி' என எல்லோரும் சேர்ந்துகொள்வார்கள். இரவு நேரங்களில் நான் தனியாக வரும்போது, என்னைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுத்தான் செல்வார்கள். யாராவது என்னை மிரட்டினால், இவர்கள் அவர்களைத் திருப்பி மிரட்டுவார்கள். இவையெல்லாம் தெரு நாய்கள்தான்; ஆனாலும் இவற்றுக்குப் பாசம் அதிகம்.
இப்போது என்னிடம் இருப்பவன் 'ஜெய் ஸ்ரீராம்'. சுருக்கமாக 'ஜெய்' என்று அழைப்போம். மிகவும் குறும்புக்காரன், பாசக்காரன். "கறி மட்டுமே சாப்பிடுவேன்" என்பது போல் அடம்பிடிப்பான். ஆனால், வாழைப்பழம், தயிர், இனிப்பு பிஸ்கட் ஆகியவற்றையும் நன்றாகச் சாப்பிடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். குழந்தைகளுடன் மிகவும் அன்பாக விளையாடுவான்.
ஆனால், அவனுக்கு யாராவது தொந்தரவு செய்தாலோ, அடித்தாலோ, வண்டியைக் கால் மீது ஏற்றினாலோ, அல்லது தெரியாத நபர்கள் ஊருக்குள் வந்தாலோ அவனுக்குப் பிடிக்காது. தவறான எண்ணத்துடன் யாரேனும் எங்கள் ஊரில் கால் வைத்தாலே போதும், ஆறு பேரும் சேர்ந்து ரகளை செய்துவிடுவார்கள். அதனால் எங்களுக்குப் பெரிய பாதுகாப்பாக இருக்கிறது. மற்ற நேரங்களில் அவன் இருக்கும் இடமே தெரியாது. நான் வந்தவுடன் ஓடிப் பிடித்து விளையாட அழைப்பான்; பலமுறை என்னைத் தள்ளிவிட்டும் இருக்கிறான். ஒருநாள் அவன் அருகம்புல் சாப்பிடுவதைப் பார்த்து வியந்தேன்.
நாய்க்குட்டிகள் திருடர்களிடமிருந்தும், கெட்ட மனிதர்களிடமிருந்தும் நமக்குப் பாதுகாப்புத் தருகின்றன. கெட்ட நாய்களும் இருக்கின்றன, இல்லை என்று சொல்லவில்லை; ஆனால் நல்ல நாய்க்குட்டிகளும் நிறைய இருக்கின்றன. காசு கொடுத்துத்தான் நாய் வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மூர் நாட்டு நாய்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
இரவு 10 மணிக்கு மேல் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எங்கள் ஊரில் இந்த நாய்க்குட்டிகள் பாதுகாப்பாகத் துணையாக வருகின்றன. அதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். நான் ஒரு நாயைத்தான் வளர்க்க ஆரம்பித்தேன்; இன்று எங்கள் பகுதியில் இருபது, முப்பது நாய்களுக்கு மேல் எல்லோரும் அன்போடு வளர்க்கிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நாட்டு நாய்கள் இந்தியாவின் தட்பவெப்பநிலை மற்றும் சூழலுக்கு இயற்கையாகவே பழகிய மிகச் சிறந்த, ஆரோக்கியமான நாய் இனங்களாகும். வெளிநாட்டு நாய் இனங்களைவிட இவற்றுக்குப் பல தனித்துவமான சிறப்புகள் உண்டு.
இந்தியச் சூழலில் வாழப் பழக்கப்பட்டவை என்பதால், வெளிநாட்டு நாய்களைப் போல இவற்றுக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடுகள் ஏற்படாது. காய்ச்சல், தோல் வியாதிகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் இயற்கையான ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
இவற்றுக்கு விலையுயர்ந்த உணவுகளோ அல்லது அழகு நிலையப் பராமரிப்போ தேவையில்லை. நாம் உண்ணும் சாதாரண உணவையே விரும்பிச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழும்.
மிதமான உடல் எடையும், கூர்மையான மூக்கும், வலிமையான கால்களும் கொண்டவை. இதனால் மிக வேகமாக ஓடவும், நீண்ட தூரம் பயணிக்கவும் இயலும்.
இந்தியாவின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு இவற்றுக்குப் பருமனான உரோமங்கள் இருக்காது. எனவே, அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவை.
நாட்டு நாய்கள் மிகவும் விழிப்புணர்வு மிக்கவை. தனது பகுதிக்குள் புதிய நபர்கள் அல்லது விலங்குகள் நுழைந்தால் உடனடியாகக் குரல் கொடுத்து எச்சரிக்கும்.
கட்டளைகளை மிக விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. முறையாகப் பயிற்சி அளித்தால் மிகச் சிறந்த காவல்காரர்களாகவும், குடும்பச் செல்லப்பிராணிகளாகவும் விளங்க முடியும்.
தன் உரிமையாளர் குடும்பத்தினரிடம் மிகுந்த பாசமும் விசுவாசமும் கொண்டவை. குறிப்பாகக் குழந்தைகளிடம் மிகவும் பாதுகாப்பாகவும் அன்பாகவும் பழகும் தன்மை கொண்டவை.
(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)