நெற்றிக்கண் திறப்பினும்....!

Su.tha Arivalagan
Jan 20, 2026,12:46 PM IST

- எம்.கே. திருப்பதி


புலவன் தருமி

 புரண்டான் வறுமையில் 

 பரமன் புலவனாய் 

 புனைந்தான் கவிதையை 


 செண்பகப் பாண்டியன் 

 சிந்தையை அரித்தது

 செவ்வியல் கூந்தல் மணம்

 செயலா இயல்பா?




 ஆயிரம் பொன் 

 அறிவிப்பு செய்து

 முரசு அறைந்தான் 

 முடிவது கேட்க


 முண்டியடித்த தருமி 

 முனங்கினான் 

 சொல்லில் வறுமையுற

 சுணங்கினான்


 முடிவில் தருமி 

 முக்கண்ணன் பாட்டோடு 

 அக மகிழ்வெய்தி 

 அவை சேர்ந்தான் 


 பண்பாடி பரிசாய்

 பொன் வரும் நேரம்

 கண் கொத்தி பாம்பாய் 

 கவிஞன் புகுந்தான் 


 'அரசன் ஐயக்கிடை

 அகன்றது போலும் 

 அடியேன் ஐயக்கிடை 

 அளவின்றி நீளும் '


' பிழைத்தது உன் பாடல்

 பிழைத்து போம்'என  

 அவை அதிர

 நவை நவின்றான் 


 ஐயம் தீர்க்க 

 ஐயனே வந்தான்

 அவையோருக்கு 

 அதிர்ச்சி தந்தான்!


 'தினம் பூக்கும் 

 மணப் பூக்களும் 

 நறுமணத் திரவிய 

 நாற்றமும் அல்லேல்...


 எக்காலமும்

 எம்குலப் பெண்ணுக்கு

 வழி வழி அந்த 

 வாசம் வறுமையே!'


 கீரரின் கூற்று 

 கீறியது கிரியை!


 உவமைக்கு அழைத்தான் 

 உற்றவள் கௌரியை! 


 'வானுறை தெய்வம்

 ஊனுறை உத்தமி 

 பேதை முதலாக 

 பேரிளம்பெண் முடிவாக

 இயற்கையின்

 இயல்பில் இல்லை!'


 சங்கறுப் போனை 

 சங்கரன் எரித்து 

 உண்மை உரைத்தோனுக்கு

 மீண்டும்

 உயிரைக் கொடுத்தான்!


 வாழ்த்தினான் 

 குற்றாலநாதன்!


 வாங்கிக் கொண்டான் அதை

 நெடுஞ்சான் கிடையாக

 நெடுநல் வாடையை 

 எழுதிய மூலன்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)