ஒவ்வொரு துணியும்.. ஒவ்வொரு மாணவ மணியாய்.. !
- வி. துர்கா தேவி
பெயருக்கு அரை ஆண்டுத் தேர்வாயினும் முழு பாடப்பகுதியும் அடங்கிய பத்தாம் வகுப்பு அரை ஆண்டுத் தேர்வு, தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு, மெல்ல கற்போர்க்கு தனிக்கவனம், அறைக்கண்காளிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் என பம்பரமாக சுழன்றாலும், மாதத்திற்கு குறைந்தது இரண்டு புதுப் புடவை வாங்கும் ஒப்பந்தத்தில் மாற்றமேதும் இல்லாததால் கோடை விடுமுறைக்குள் புடவைகள் சிறு குன்றாக குவிந்துள்ளன....
கோடை சுற்றுலாவிற்கு ரகத்திற்கு ஒன்றென ஆடைகளை தைக்க எத்தனித்து துணியை அளவாக வெட்ட முயன்ற வேளையில், துணி வகைகள் ஒவ்வொன்றும் எம்மாணவச்செல்வங்களை நினைவுறுத்தியது...
வெட்டும் போதோ தைக்கும் போதோ துளியும் சிரமம் தரா பருத்தி போல் சிலர்
கூடுதல் கவனம் கொடுத்து தைத்தால் மிக பொலிவுடன் ஜொலிக்கும் டிசைனர் ஆடை போல் சிலர்...
சற்றே கவனமாக வெட்டினால் தைக்கும் போது பெரிதாக இடர் தரா பட்டு போல் சிலர்..
கொஞ்சம் மொடப்பாக இருந்தாலும் , அழுத்தி தைத்து பாங்காக உடுத்தினால் அழகுற அமரும் கோரா காட்டனாக சிலர்
வெட்டும் போது அழகாக ஒத்துழைத்தாலும் தைக்கும் போது விலகி போக்கு காட்டும் மெல்லிய ஷிபானாக சிலர்
பார்க்க மிக எளிமையாக இருந்தாலும் வடிவாக தைத்து உடுத்தினால் அழகாக காட்சிதரும் பூனம் போல் சிலர்
நெட்டை, குட்டை வித்தியாசமின்றி அணியும் அனைவருக்கும் பாங்குற பொருந்தும் மார்பிள் துணி போல் சிலர்...
எத்துணை கவனத்துடன் வெட்டி தைத்தாலும் பிழையாகி ,மீண்டும் மீண்டும் பிழைத்திருத்தி அணியும் வரை சவால் விடும் வழுக்கும் சீனபட்டாக சிலர்....
ஒரு வழியாக அனைத்தையும் தைத்து முடித்து,மன நிறைவுடனே அடுக்கினேன்...
தாய் போன்ற பாசத்துடனும், மிகுந்த கவனத்துடனும், சிந்தனை அனைத்தையும் அவர்கள் மேல் கொண்டு,
சமுதாயத்துடன் மிக சிறப்புடனே பொருந்திப்போகும் நற்குடிமகன்களாகவே என் மாணவச்செல்வங்களை வடிவமைத்துள்ளதை எண்ணி!
(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai Dt)