மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!
Nov 21, 2025,12:38 PM IST
- தி.சந்தனமேரி
புல்வெளி மரங்கள்
பச்சைப் புடவையால் அலங்கரித்துக் கொண்டிட
செடி கொடிகள்
மலர்க்கிரீடங்களால்
மணம் கமழ்ந்திட ...
சாலைகள் தம்மை
தாமே தூய்மையாக்கி
மெருகூட்டிக் கொண்டிட...
மலையருவி மின்னும்
வெள்ளி முத்துச்சரம்
அணிந்து அழகூட்டிட...
நடனமங்கையராம் மயில்கள்
தாளத்துடன் தோகைவிரித்து
நேர்த்தியாய் நடனமாடிட...
ஆறு குளங்கள்
தமது நிறைவின்
அழகை வெளிப்படுத்திட...
மாலுமிகளாய் மாறி
மழலைகள்
ஓடும் நீரிலே
கப்பல் விட்டிட...
பள்ளிச் சிறார்கள்
விவசாயிகள் பயிர்களின்
செழிப்பைக் கண்டு
மனம் நெகிழ்ந்திட...
இப்புவியின் அழகுக்கலை வல்லுநராம்
மழையிடம் வரிசைகட்டி நின்றனர்
எங்கும் மகிழ்ச்சி!
என்ற தட்சணையுடன்.