தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Su.tha Arivalagan
Jul 02, 2026,01:47 PM IST

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) முன்னணி தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை முறைப்படி இன்று இணைத்துக் கொண்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் நடைபெறும் என சொல்லப்பட்ட இந்த நிகழ்வில், பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் முன்னிலையில் அவர்கள் இருவரும் தவெக-வில் இணைந்துள்ளனர்.


முக்கியத்துவம் பெறும் அரசியல் நகர்வு : 




சி.விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை (சுகாதாரம்) அமைச்சராகப் பணியாற்றியவர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் வலுவான ஆளுமையாகத் திகழ்பவர். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, இன்று தவெக.,வில் இணைந்துள்ளார்.


எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கரூர் மாவட்டத்தில் கட்சியின் முக்கியத் தூணாகச் செயல்பட்டு வந்தவர். கரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் இன்று இணைந்துள்ளார்.


தவெக-விற்கு வலுசேர்க்கும் இணைவு

நடிகர் விஜய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து , பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கி நகர்ந்து வருகின்றனர். இருப்பினும், மாநில அளவில் அறியப்பட்ட, அமைச்சர்களாகப் பணியாற்றிய மூத்த தலைவர்கள் தவெக-வில் இணைவது இதுவே முதல்முறையாகும்.


இந்த இணைவின் மூலம், தவெக அடித்தட்டு மக்களிடையேயும், கிராமப்புறப் பகுதிகளிலும் தங்களது செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, டெல்டா மற்றும் கொங்கு மண்டல அரசியல் களத்தில் இந்த மாற்றம் தவெக-விற்குப் பெரும் சாதகமாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


தொண்டர்கள் உற்சாகம்

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் மாலை மற்றும் பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், கட்சியை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் இருந்து மூத்த தலைவர்கள் வெளியேறியிருப்பது, அக்கட்சிக்குச் சற்றே பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு மிகப்பெரிய ஊக்கசக்தியாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இனிவரும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் பல சுவாரசியமான திருப்பங்களைக் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.