பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
சென்னை: பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களில் இரட்டையர்கள் என்றால் அது சபேஷ் - முரளி தான். இவர்கள் இருவரும் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்கள் ஆவர். சபேஷ் - முரளி இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி, மாண்புமிகு குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளனர்.
சபேஷ் - முரளியின் இசை தொடக்கம் என்பது கடந்த 2001-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சமுத்திரம் படம் தான். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சபேஷ் - முரளி, அடுத்தடுத்து நைனா, பாறை, அயோத்யா, ஜோடி, பாரிஜாதம், தலைமகன், அரசாங்கம், சிந்து சமவெளி, அன்னக்கொடி, கொடி வீரன், திருமணம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 21ம் தேதி சபேஷ்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சபேஷ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.