ரூ. 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதிய ரசிகை.. பதிலுக்கு அவர் என்ன செஞ்சார் தெரியுமா?

Su.tha Arivalagan
Jul 28, 2025,03:38 PM IST

மும்பை: இந்தி நடிகர் சஞ்சய் தத் மீதான பாசத்தால் தனக்குச் சொந்தமான ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்தை அவருக்கு எழுதி வைத்துள்ளார் ஒரு ரசிகை. ஆனால் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சய் தத், அந்த சொத்துக்களை அந்த ரசிகையின் குடும்பத்துக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.


கேட்கவே ஆச்சரியமாக இருக்கில்லையா.. ஆனால் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட தீவிர ரசிகர்களும் இருப்பது வியப்புதான். 


'கர்லி டேல்ஸ்' நேர்காணலில் இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்டார் சஞ்சய் தத். அதுகுறித்து அவர் கூறுகையில்,  2018-ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. நிஷா பாட்டீல் என்பவர் எனது தீவிர ரசிகையாக இருந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பெரும் கோடீஸ்வரியான அவர், தனது ஒட்டுமொத்த சொத்தையும் எனக்கு எழுதி வைத்து விட்டார். கிட்டத்தட்ட ரூ. 72 கோடி சொத்துக்கள் அவை. 




எனக்கு இது அதிர்ச்சி அளித்தது. நெகிழ்ச்சி அடைந்த நான் அதை அவரது குடும்பத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன். 62 வயதான அந்த ரசிகை, தான் இறந்த பிறகு தனது சொத்துக்களை எனக்கு மாற்றும்படி தனது வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.


சஞ்சய் தத் 1981-ஆம் ஆண்டு ராக்கி மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.  சாஜன், கல் நாயக், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அவர் நடித்துள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அவரது தொடர்பு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றுத்தந்தது. அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.


தமிழிலும்  அவர் தனது அடியை எடுத்து வைத்தார். விஜய்யின் லியோ படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது. பூத்னி மற்றும் ஹவுஸ்ஃபுல் 5 ஆகிய படங்களில் கடைசியாக அவர் நடித்துள்ளார். தெலுங்கில்  பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2' படத்திலும் தற்போது அவர் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.