இப்படியும் தமிழில் படம் எடுக்க முடியும்.. மனதை உலுக்கிய சிறை.. ஒரு விமர்சனம்

Su.tha Arivalagan
Jan 16, 2026,02:42 PM IST

- காயத்ரி


எதற்கெடுத்தாலும் மலையாளத்தில் எப்படி படம் எடுக்கிறாங்க பாருங்க என்று மேற்கோள் காட்டுவோர் நம்மிடம் அதிகம் உள்ளனர். அவர்களே பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு இப்போது தமிழிலும் அற்புதமான கதையம்சத்துடன் நிறைய படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் வந்து ஆச்சரியப்படுத்தியுள்ள படம்தான் சிறை.


டிசம்பர் 25,2025 வெளியான திரைப்படம்தான் சிறை. இயக்கம் : சுரேஷ் இராஜ்குமாரி தயாரிப்பு : லலித்குமார்


ஒரு கைதியின் வாழ்க்கைச் சம்பவத்தை காட்டும் உண்மைக்கதை. ரொம்ப எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அழகான திரைக்கதையை பின்னியுள்ளார் இயக்குநர் சுரேஷ். 


ஆயுதப்படை தலைமைக் காவலராக விக்ரம் பிரவு, கைதியாக அக்சைய் குமார். நமது தமிழநாட்டிலிலேயே படமாக்கப்பட்ட அழகான திரைப்படம். காவலில் இருக்கும் கைதிக்குள் இருக்கும் எதார்த்தமான ஆசைகள், தன்னுடைய நியாயங்கள் பற்றி பேசும் படம்.




காவலர்களும் கைதிகளின் எண்ணங்களை மதித்து நடப்பர், வாழ வழிக்காட்டுவர் என்பது உச்சம். கதிரவனாக தலைமைக் காவலர் விக்ரம் பிரபு நடிப்பு பிரமாண்டம் . கைதியாக அக்சைய் குமார் படத்தில் அப்துல். அதைவிட தத்ரூபமாக உள்ளது. அணிஷ்மா கதாநாயகி, கதாபாத்திரம் கலையரசி. ஆழமான அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.  


ஐந்து வருடங்களாக கைதியாக வாழும் அப்துல், ஒவ்வொரு வாய்தாவின் போது மட்டுமே அப்துலை சந்திக்கும் கலையரசி. ஊரில் படித்து, இருவரும் நேசித்து , வெவ்வேறு சமூகம் என்பதால் பூசல் எழ அப்துல் அம்மாவை கலையரசி அப்பா தாக்கிட, அவரை அப்துல் தெரியாமல் தள்ளிட விட கல்லில் அடிப்பட்டு மரணிக்கிறார். 


யாருக்கும் தெரியாத போதும், அப்துல் தானே  கொன்றதாக சரணடைகிறார். இது அனைத்தும் தெரிந்தும் கலையரசி அப்துலை புரிந்துகொண்டு 5 வருடங்களாக காத்திருப்பது உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டு. 


இவர்களுக்கிடையில் அப்பா, அம்மா, அக்கா, மாமா என கலையரசிக்கு உறவுகள் உண்டு. அப்துலுக்கு அம்மாவை தவிர யாருமில்லை. அம்மாவும் அவன் காவல்நிலையத்தில் இருக்கும் போதே இறந்துவிடுகிறார்.


தன்னை நேசிக்கும் கலையரசி மட்டுமே உலகமென தன் கற்பனையில் அவ்வப்போது ரசிக்கும் அப்துல் நடிப்பு அருமை. மிகச்சாதாரணமான உடைகள், கிராமப்புற காட்சிகள். நீதிபதி மற்றும் காவலர்களின் கருணை ஆங்காங்கே சிறப்பு. உணர்வுப்பூர்வமான திரைப்படம். 20 நாட்களைக் கடந்தும் இன்னும் தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பதே இது சிறந்த படம் என்பதற்கான சான்று. இன்னும் பார்க்காதவர்கள் உடனே போய்ப் பாருங்கள்.


(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)