சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம்

Su.tha Arivalagan
Aug 28, 2025,12:39 PM IST
சென்னை : சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 14 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, கோர்ட் உத்தரவுடன் போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இன்று எழிலகம் வாசலில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முறையான சம்பளம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காலியாக உள்ள 60,000 க்கம் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.6750 ஓய்வூதியம் வேண்டும் என்பவை சத்துணவு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. கருப்பு உடையணிந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஏழு கட்ட போராட்டம் ஆகஸ்ட் 21ம் தேதி துவங்கியது. முதல் கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 20ம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

தொடர்ச்சியாக தற்செயல் விடுப்பு போராட்டம், சென்னையில் பேரணி, மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம், 2026ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர்  வேலை நிறுத்தம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் சத்துணவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.