பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
சென்னை: பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களின் சாதனைகள் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!
இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களின் சாதனைகள்.
அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது.
உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.